பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் தொழுகை நடத்திக்கொண்டிருந்த காவலர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87ஆக அதிகரித்துள்ளது.
இதுதவிர 157பேர் காயமடைந்துள்ளனர். இதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகின்றது.
பொலிஸ் தலைமையகம் மற்றும் உளவுத்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு பணியகங்கள் உள்ள உயர் பாதுகாப்பு பகுதியில், குண்டுதாரி எப்படி உள்ளே நுழைந்தார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
பாகிஸ்தானின் பிரதமரும் மற்ற தலைவர்களும் இந்த தாக்குதலை கண்டித்துள்ளனர். இது சமீப ஆண்டுகளில் நாட்டில் நடந்த மிக மோசமான தாக்குதலாகும்.
இந்த தாக்குதலுக்கும் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என தலிபான் தளபதிகளில் ஒருவர் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானுடனான நாட்டின் எல்லைக்கு அருகில் உள்ள வடமேற்கு நகரத்தில், பலத்த பாதுகாப்புடன் கூடிய தலைமையக பகுதிக்குள் அமைந்துள்ள இந்த மசூதியில், நேற்று (திங்கட்கிழமை) மதியம் தொழுகையின் போது 13:30 மணியளவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
அந்த நேரத்தில் 300 முதல் 400 பொலிஸ் அதிகாரிகள் அப்பகுதியில் இருந்ததாக பெஷாவர் பொலிஸ் தலைவர் முஹம்மது இஜாஸ் கான் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இந்தப் பகுதியில், பொலிஸ் தலைமையகம் மற்றும் உளவுத்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு பணியகங்கள் உள்ளன.
‘பாகிஸ்தானைப் பாதுகாக்கும் கடமையைச் செய்பவர்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் அச்சத்தை உருவாக்க விரும்புகிறார்கள்’ என்று பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கூறினார்.
இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் இருந்தவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஷெரீப் கூறினார். தீவிரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக ஒட்டுமொத்த தேசமும் ஒன்றுபட்டு நிற்கிறது என்றும் அவர் கூறினார்.
இந்த தாக்குதலுக்கு ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தி தொடர்பாளர் கண்டனம் தெரிவித்தார். ஒரு வழிபாட்டுத் தலத்தில் இத்தகைய தாக்குதல் நடந்தது மிகவும் வெறுக்கத்தக்கது என அவர் கூறினார்.
நேற்று ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான், இஸ்லாமாபாத்திற்கு வருகை தரவிருந்தார். ஆனால், மோசமான வானிலை காரணமாக கடைசி நிமிடத்தில் பயணம் இரத்து செய்யப்பட்டது.