இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான முரளி விஜய், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவுக்கெதிரான பார்டர்-கவாஸ்கர் கிண்ணத் தொடரில் அறிமுகமானதில் இருந்து இந்தியாவுக்காக 61 டெஸ்ட், 17 ஒருநாள் மற்றும் 9 ரி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் பெர்த்தில் நடைபெற்ற அவுஸ்ரேலிய அணிக்கெதிரான டெஸ்டில் 38 வயதான முரளி விஜய் இறுதியாக விளையாடியிருந்தார்.
உலகம் முழுவதும் விளையாடுவதற்கான வாய்ப்புகளைத் தேடிக்கொள்வதாகவும், விளையாட்டின் வணிகப் பக்கத்தையும் ஆராய்வதாகவும் விஜய் கூறியுள்ளார்.
தனது ஓய்வுக் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மிகுந்த நன்றியுடனும் பணிவுடனும், அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் எனது ஓய்வை அறிவிக்கிறேன். 2002-2018 வரையிலான எனது பயணம் எனது வாழ்க்கையின் மிக அற்புதமான ஆண்டுகள், ஏனெனில் இது விளையாட்டின் மிக உயர்ந்த மட்டத்தில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய பெருமையாகும்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பிசிசிஐ), தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ), சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் செம்பிளாஸ்ட் சன்மார் எனக்கு வழங்கிய வாய்ப்புகளுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
கிரிக்கெட் உலகிலும் அதன் வணிகப் பக்கத்திலும் புதிய வாய்ப்புகளை நான் ஆராய்வேன் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், அங்கு நான் விரும்பும் விளையாட்டில் தொடர்ந்து பங்கேற்பேன், புதிய மற்றும் வித்தியாசமான சூழல்களில் எனக்கு சவால் விடுவேன். நான் நம்புகிறேன். இது ஒரு கிரிக்கெட் வீரராக எனது பயணத்தின் அடுத்த படியாகும், மேலும், எனது வாழ்க்கையில் இந்த புதிய அத்தியாயத்தை எதிர்பார்க்கிறேன்’ என கூறினார்.
2013 முதல் 2018ஆம் ஆண்டுகள் வரை இந்திய டெஸ்ட் அணியில் முக்கிய வீரராக இருந்தார் முரளி விஜய், டிசம்பர் 2013 முதல் ஜனவரி 2015ஆம் ஆண்டுகள் வரை இந்திய அணி – தென்னாபிரிக்கா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியபோது அதிக பந்துகளை எதிர்கொண்ட, அதிக ஓட்டங்கள் எடுத்தவர்களில் இரண்டாவது துடுப்பாட்ட வீரராக இருந்தார்.
முரளி விஜய். டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 சதங்கள், 15 அரை சதங்களுடன் 3982 ஓட்டங்களை குவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டை பொறுத்தவரை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, 2010ஆம் மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் சம்பியன் கிண்ணம் வென்றபோது அந்த அணியின் முக்கிய வீரராக இருந்தார்.
இதுதவிர, டெல்லி டேயாடெவில்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.
இதுவரை 106 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள், 13 அரை சதங்களுடன் 2619 ஓட்டங்களை குவித்துள்ளார்.