ஜனாதிபதியின் புதிய உத்தரவு காரணமாக தேர்தல் பணிகளுக்கு மற்றுமொரு தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல்கள் ஆணைக்குழு தற்போது உள்ளுராட்சி தேர்தலுக்கு தயாராகி வருகின்றது.
இதற்கமைய, தேர்தலுக்கான அடிப்படை செயற்பாடுகள் கடன் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடன் அடிப்படையில் அரச நிறுவனங்களுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
மேலும் அனைத்து அரச அதிகாரிகளுக்கும் இது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் எனவும் அதனை மீறும் அரச அதிகாரிகள் அதற்கான செலவினங்களை தனிப்பட்ட முறையில் செலுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் ஜனாதிபதியின் புதிய உத்தரவு காரணமாக கடன் அடிப்படையில் எரிபொருள் வழங்குதல், அச்சிடுதல் பணிகளை முன்னெடுத்தல், அரச உத்தியோகத்தர்களின் சேவைகளைப் பெற்றுக்கொள்வது போன்ற தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு மற்றுமொரு தடை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதுவரை நடைபெற்றுள்ள ஒவ்வொரு தேர்தலிலும், தேர்தல் ஆணைக்குழுவானது, கடன் அடிப்படையில் பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்முதல் செய்து, அது தொடர்பான பணம் அவ்வப்போது விடுவிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் உள்ளுராட்சி தேர்தலை இலக்காக கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.