பிலிப்பைன்ஸில் உள்ள நான்கு கூடுதல் இராணுவத் தளங்களுக்கான அணுகலை அமெரிக்கா பெற்றுள்ளது.
இது முக்கிய பகுதியான தென் சீனக் கடல் மற்றும் தாய்வானைச் சுற்றியுள்ள சீனாவைக் கண்காணிக்க உகந்த இடமாக பார்க்கப்படுகின்றது.
மணிலாவில் இன்று (வியாழக்கிழமை) பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் ‘பாங்பாங்’ மார்கோஸ் ஜூனியரை பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் சந்தித்த பின்னர் இந்த செய்தி வந்தது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், வடக்கே தென் கொரியா மற்றும் ஜப்பான் முதல் தெற்கே அவுஸ்ரேலியா வரையிலான அமெரிக்க கூட்டணிகளின் இடைவெளியை அமெரிக்கா இணைத்துள்ளது.
மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்கா ஏற்கனவே ஐந்து தளங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அணுகலைக் கொண்டுள்ளது. ஆனால், புதிய தளங்கள் எங்கே என்று அமெரிக்கா கூறவில்லை. ஆனால் அவற்றில் மூன்று பிலிப்பைன்ஸின் வடக்கு விளிம்பில் உள்ள லூசோன் தீவில் இருக்கலாம்.
புதிய இணைப்புகள் மற்றும் விரிவாக்கப்பட்ட அணுகல், அமெரிக்காவின்; அறிக்கையின்படி, ‘பிலிப்பைன்ஸில் மனிதாபிமான மற்றும் காலநிலை தொடர்பான பேரழிவுகளுக்கு விரைவான ஆதரவை அனுமதிக்கும் மற்றும் பிற பகிரப்பட்ட சவால்களுக்கு பதிலளிக்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.