ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, பல்லாயிரக்கணக்கான கைதிகளுக்கு மன்னிப்பு அல்லது சிறை தண்டனையை குறைக்க அனுமதித்துள்ளார்.
இதில் சிலர் சமீபத்திய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கைது செய்யப்பட்டவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அயதுல்லா அலி கமேனியால் அங்கீகரிக்கப்பட்ட மன்னிப்புகள் நிபந்தனைகளுடன் வந்தன.
மாநில ஊடக அறிக்கைகளில் அறிவிக்கப்பட்ட விபரங்களின்படி, இந்த நடவடிக்கை ஈரானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏராளமான இரட்டை குடிமக்களுக்கு பொருந்தாது.
மேலும், ‘வெளிநாட்டு நிறுவனங்களுக்காக உளவு பார்த்தல்’ அல்லது ‘இஸ்லாமிய குடியரசிற்கு விரோதமான குழுக்களுடன் தொடர்புடையவர்கள்’ என்று குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் இது பொருந்தாது.
மனித உரிமை ஆர்வலர்களின் செய்தி நிறுவனம் கூறியுள்ளபடி, ஈரானின் வெளிநாட்டு எதிரிகளை தூண்டிவிட்டதாக அதிகாரிகள் குற்றம் சாட்டிய போராட்டங்கள் தொடர்பாக சுமார் 20,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1979 இஸ்லாமியப் புரட்சியின் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் காமேனி மன்னிப்புகளை அங்கீகரித்தார். கமேனி 1989இல் நாட்டின் அரசியல் மற்றும் மதத் தலைவராக பதவி ஏற்றார்.
நோர்வேயை தளமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் குழு கடந்த வாரம் குறைந்தது 100 தடுத்து வைக்கப்பட்டுள்ள எதிர்ப்பாளர்கள் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று கூறியது.