உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக 770 மில்லியன் ரூபாயினை வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு இதுவரை திறைசேரியிலிருந்து பதில் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பெப்ரவரி மாதத்தில் தேர்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக 770 மில்லியன் ரூபாவை விடுவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா நிதி அமைச்சின் செயலாளரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும், இதுவரையில் இதற்கான பதில் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, அத்தியாவசிய அரச செலவினங்களுக்கான ஒதுக்கீடுகளை மட்டுமே வழங்குமாறு திறைசேரி செயலாளருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற ரீதியில் ரணில் விக்கிரமசிங்க இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
அரச வருமான நிலைமை மேம்படும் வரை அரச சேவையைப் பேணுவதற்கு அத்தியாவசிய அரச செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மாத்திரம் வழங்குமாறு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
முன்னர் மேற்கொள்ளப்பட்டது போன்று அரசாங்க நடவடிக்கைகளுக்கான நிதி விடுவிப்பு, மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் தடையாக இருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.