ஜனாதிபதியின் யாழ் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன், சட்டத்தரணி க.சுகாஸ் உள்ளிட்ட 18 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாள் என பிரகடனப்படுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்.நகரில் எதிர்ப்பு போராட்டம் ஒன்றுக்கு நேற்று அழைப்பு விடுத்திருந்த போதும் பொலிஸார் நீதிமன்றத்தின் ஊடாக தடை உத்தரவை பெற்றிருந்தனர்.
எனினும் தடை உத்தரவை மீறி நேற்று மாலை தமிழ்தேசிய மக்கள் முன்னணியினால் எதிர்ப்பு போராட்டம் திட்டமிட்டபடி நடத்தப்பட்டிருந்த நிலையில் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் பிரபல சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்ட 18 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களை நேற்று யாழ்ப்பாண மேலதிக நீதிவானின் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தியபோது அவர்களை தலா 3 லட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீர பிணையில் செல்ல அனுமதித்து வழக்கு விசாரணையை 22ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.