ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கத்தை கவிழ்க்க வெளிநாட்டு நாசகாரர்களை பயன்படுத்தி ரஷ்யா சதி செய்வதாக மால்டோவாவின் ஜனாதிபதி மையா சண்டு குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) புதிய பிரதமராக டோரின் ரீசியனை அவர் நியமித்தார். அவர் தனது முன்னோடியைப் போலவே ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவானவர்.
‘சதி’ எதிர்க்கட்சி என்று அழைக்கப்படுபவர்களின் எதிர்ப்புகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் இது அரசியலமைப்பு ஒழுங்கை தூக்கியெறிவதை நோக்கமாகக் கொண்டது என்றும் ஜனாதிபதி சாண்டு கூறினார்,
ராணுவ பின்னணி கொண்ட நாசகாரர்களை, சிவில் உடையில் மறைத்து, வன்முறை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அரசு நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தவும், பணயக்கைதிகளை சிறை பிடிக்கவும்’ ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி சாண்டு குற்றம் சாட்டினார்.
ரஷ்யா, மாண்டினீக்ரோ, பெலாரஸ் மற்றும் செர்பியா ஆகிய நாடுகளின் குடிமக்கள் மால்டோவாவிற்குள் நுழைவதை இந்த சதித்திட்டம் உள்ளடக்கியது என்று அவர் தெரிவித்தார்.
அண்டை நாடான உக்ரைனில் ரஷ்யாவின் போர் ஐரோப்பாவின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான மால்டோவாவை பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.
கடந்த வாரம் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, மால்டோவாவை அழிக்கும் ரஷ்ய திட்டத்தை உக்ரைனின் உளவுத்துறை கண்டுபிடித்ததாகக் கூறினார்.
ருமேனியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் பிளவுபட்ட மால்டோவா, கடந்த கோடையில் ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமைக்கான வேட்பாளராக ஆனது. 2.6 மில்லியன் மக்கள் வாழும் நாடு, உக்ரைனில் இருந்து அகதிகளின் வருகை மற்றும் 1,500 ரஷ்ய வீரர்கள் நிலைகொண்டுள்ள பிரிந்து சென்ற ரஷ்ய சார்பு பிராந்தியமான டிரான்ஸ்னிஸ்ட்ரியாவுடனான பதற்றங்களுடன் போராடி வருகிறது.
மால்டோவா – முன்னர் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இயற்கை எரிவாயுக்காக ரஷ்யாவைச் சார்ந்துள்ளது. உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான ரஷ்யாவின் தாக்குதலுடன், கடந்த ஆண்டில் அது மின்வெட்டுகளை சந்தித்துள்ளது.