பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவில் தற்போது வரையில் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான உயிர்ப்பலிகள் கணக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது
கட்டட நிர்மாணங்கள் உள்ளிட்ட இதர அசையும், அசையாத சொத்துக்களின் அழிவுகள் தொடர்பில் இன்னமும் கணக்கெடுப்புக்கள் முன்னெடுக்கப்படவில்லை.
தற்போதும், இடிபாடுகளுக்குள் இருந்து கைக்குழந்தைகள் முதல் முதுமையானவர்கள் வரையில் மீட்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். மீட்புப் பணிகள் தொடர வேண்டியுள்ளது.
எனினும், அனர்த்தங்களை ஏற்படுத்திய பூகம்பங்களுக்கு அப்பால் சிறிது சிறிதாக இரு பூகம்பங்கள் நிகழ ஆரம்பித்துள்ளமையால் மீண்டும் அனர்த்தங்கள் நிகழ்ந்து விடுமோ என்ற அச்சங்களும் நீடிக்கின்றன.
இவ்வாறான நிலையில், துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளுக்கு பல்வேறு நாடுகளும் மீட்பு பணிகள் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன.
இருந்தபோதும், இந்தியாவின் மீட்புக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் அவரசமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள தொன் கணக்கான உதவிப்பொருகள் தற்போது பேசுபொருளாகியிருக்கின்றன.
இதற்கு இரண்டு காரணங்கள் பிரதானமாக உள்ளன. முதலாவது, இந்தியா தற்போது ஜி-20நாடுகளின் தலைமைத்துவத்தினைக் கொண்டிருக்கின்றது.
அடுத்தது, இந்தியா, அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ள சிரியாவுக்கும் மனிதாபிமான ரீதியில் முன்னெடுத்துள்ள உதவிகள் ஆகியனவே அவையாகும்.
அந்தவகையில், இந்தியாவின் மீட்பு குழுவினர் ‘ஒபரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில் அர்ப்பணிப்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, துருக்கியில் பூகம்ப இடிபாடுகளில் சிக்கிய பெண் ஒருவர், இந்திய இராணுவத்தால் மீட்கப்பட்டதன் பின்னர், அந்தப் பெண் இராணுவ அதிகாரியை வாரி அணைத்து கன்னத்தில் முத்தமிட்ட புகைப்படம் பார்ப்போரை நெகிழ வைத்திருப்பதுடன், இந்தியாவின் அவசர உதவிகளுக்கு கிடைத்த அங்கீகாரமாகவும் கொள்ள முடியும்.
அத்துடன், இந்தியா மருத்துவப் பொருட்கள், மருத்துவர்கள் மற்றும் தேடல் மற்றும் மீட்புக் குழுக்களையும் துருக்கிக்கு அனுப்பியுள்ளது. துருக்கிக்கு மட்டுமில்லாமல், சிரியாவுக்கும் இந்திய விமானப்படையின் சி-130ஜே விமானத்தில் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவின் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் உட்பட அவசர செயற்பாடுகளுக்காக சுமார் 250பேரை குழுவினரை இந்தியா ஏற்கனவே அனுப்பி உள்ளது.
குறித்த குழுவில் படையினர், சிறப்பு பயிற்சி பெற்ற குழுவினர்கள், தன்னர்வு தொண்டு நிறுவனங்களின் அங்கத்தவர்கள் என்போர் இடம்பெற்றுள்ளனர்.
அத்துடன், இந்தியாவின் சிறப்பு படையான ராம்போ மற்றும் அவர்களது தோழமையான நாய்ப்படை, சிறப்பு வாகனங்கள் உள்ளிட்டவையும் துருக்கி மற்றும் சிரியா ஆகியவற்றின் களத்தில் இறங்கியுள்ளன.
அதேநேரம், இந்திய இராணுவத்தின் 30 படுக்கைகள் கொண்ட நடமாடும் மருத்துவமனை அமைப்பதற்கான பணியாளர்கள் மற்றும் உபகரணங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
மருத்துவமனையில் முழு செயல்பாட்டுக்காக சத்திரசிகிச்சை அறை மற்றும் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் வழங்கப்படும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
துருக்கியின் காசியான்டெப்பில் மீட்பு நடவடிக்கைகளில் இந்தியாவின் குழுக்கள் உதவி செய்து வருகின்றனர்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள குழுக்களுக்கு உதவுவதற்காக, வெளிவிவகார அமைச்சகத்தின் அதிகாரிகள் குழுவொன்றும், துருக்கி மொழி பேசுபவர்கள் உள்ளடங்கலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில், இந்தியா மேலதிக உதவிகளை வழங்குவதற்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
அதனை, இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் சஞ்சய் வர்மா தெரிவித்துள்ளார். குறித்த ஒபரேஷன் தோஸ்த் செயற்பாட்டில் இந்தியா முதற்செயற்படும் நாடாக உள்ளது.
பொதுமக்களுக்கான பாதுகாப்பை வழங்குவது, மனிதாபிமான உதவி செய்வது மற்றும் பேரிடர் நிவாரணம் ஆகியவற்றை விரைவாக தருவது ஆகியவை இந்தியாவின் செயற்பாட்டில் முக்கியமான விடயங்களாக உள்ளன.
அத்துடன், இந்தியா, அண்டை நாடுகளுக்கு மட்டுமல்ல, அதற்கு அப்பாலும் உள்ள நாடுகளுக்கும் உதவிக்கரம் நீட்டுவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செயற்படுகின்றது என்பதும் இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பூகம்பத்தில் இதுவரை உயிரிழந்தவர்களில் ஒரு இந்தியர் உயிரிழந்துள்ளதோடு,இந்தியர்கள் யாரும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் பதிவாகவில்லை.
அதேநேரம், பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து தொலைவில் 10 இந்தியர்கள் இருப்பதாக தெரியவந்துள்ளதோடு துருக்கியில் 3000 இந்தியர்கள் உள்ளனர். அதில் இஸ்தான்புல்லில் 1850 பேரும், அன்காராவில் 250 பேரும், மற்ற நகரங்களில் மீதி பேரும் உள்ளனர்.
இவ்வாறான நிலையில், இந்தியா தனது பிரஜைகளும், அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட துருக்கி பொதுமக்களுக்கும் தனது உச்சபட்சமான மனிதாபிமானத்தினை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.