உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தமது ஆணைக்குழுவால் கோரப்பட்ட நிதி ஒதுக்கீடு வழங்கப்படாமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவுக்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
இதன்படி, இருதரப்பும் இன்று (வியாழக்கிழமை) இதுதொடர்பில் கலந்துரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பை திட்டமிட்டவாறு எதிர்வரும் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடத்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
தபால் வாக்குச்சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் மாத்திரம் தாமதமடையும் என்றும் எதிர்வரும் சில நாட்களுக்குள் திட்டமிடப்பட்டபடி தபால் வாக்குச்சீட்டுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.