ஆர்ப்பாட்டம் செய்வதற்காக நாம் யாரையும் பதவியிலிருந்து நீக்க மாட்டோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ட்ரேஸ் சிட்டியிலுள்ள இலங்கை தொழில்நுட்பக் கல்லூரியின் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் நேற்று (புதன்கிழமை) காலை, நிர்வாகம் மற்றும் பொதுக் கொள்கைக்கான மையத்தை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
ருஹூணு பல்கலைக்கழகத்தில் உப வேந்தரை நீக்கக் கோரியும் கூட்டுத்தாபனம் ஒன்றின் பொது முகாமையாளரை நீக்கக் கோரியும் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் ஜனாதிபதியின் இந்த கருத்து வந்துள்ளது.
அவர்களுக்கு எதிராக ஏதேனும் தீவிரமான குறைபாடுகள் இருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் நினைத்தால் அதற்காக பின்பற்ற வேண்டிய நடைமுறை உள்ளது எனவும் உப வேந்தர்கள் தொடர்பிலும் பின்பற்ற வேண்டிய நடைமுறை உள்ளது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் என்பதற்காகவும் அது கூட்டுதாபனம் அல்லது பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்டது என்பதற்காகவும் இந்த அரசாங்கம் மாறாது என அவர் மேலும் கூறினார்.