காஷ்மீர் தினத்தை பாகிஸ்தான் வெகுவிமர்சையாக கொண்டாடி வருகின்றது.
ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 5ஆம் திகதியன்று ‘காஷ்மீர் நட்புறவு தினம்’ அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில் இம்முறை பாகிஸ்தான் காஷ்மீர் நட்புறவு தினத்தினை பாரிய அளவில் கொண்டாடியுள்ளது.
குறிப்பாக, தனது இராஜதந்திர கட்டமைப்புக்கள் செயற்படும் அனைத்து நாடுகளிலும் உள்ள உயர்ஸ்தானிகரங்கள் மற்றும் தூதரகங்கள் இந்த தினம் வெகு விமர்சையாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்திலும் வெகுவிமர்சையாக குறித்த தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்று பாகிஸ்தான் இந்த தினத்தை கொண்டாடி வருகின்ற போதும் குறித்த தினத்தில் இந்திய எதிர்ப்பு வெளிப்பாடுகள் அதிகம் காணப்படுகின்றன.
குறிப்பாக, உயர்ஸ்தானிகரங்கள் மற்றும் தூதரகங்களில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வுகளில் பாகிஸ்தானின் பிரதிநிதிகள் இந்தியாவை இலக்கு வைத்தே தமது உரைகளையும் அதேபோன்று விசேட விருந்தினர் உரைகளையும் முன்னெடுத்திருந்தனர்.
அதுமட்டுமன்றி, குறித்த தினத்தில் பாகிஸ்தானில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த ஆர்ப்பாட்டங்கள் அனைத்துமே இந்தியாவுக்கு எதிராகவே அமைந்துள்ளன.
அத்துடன், காஷ்மீர் வாழ் மக்களை இந்திய மத்திய அரசாங்கத்திற்கு எதிராக தூண்டும் வகையிலேயே அமைந்திருந்தமை வெளிப்படையான விடயமாகின்றது.
பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் காஷ்மீரை தனது பகுதியாக்குவதற்கு தீவிரமாக முயன்றிருந்தது.
இதனால் தீவிரவாதிகளின் பிரசன்னத்திற்கு குறித்த பகுதியை உள்ளாக்கி எந்தநேரமும் பதற்றமான சூழலை நீடிப்பதற்கு தொடர்ச்சியாக முனைந்து வந்தது. ஆனால் அது முடிந்திருக்கவில்லை.
முன்னதாக, 1989களின் முடிவுகளில் காஷ்மீரில் தீவிரவாத வன்முறைகள் பாகிஸ்தானால் கட்டவிழ்த்துவிடப்பட்டது.
1990 ஜனவரி மதம் 4ஆம் தேதி ஸ்ரீநகரில் இருந்து வெளியாகும் ஹிஸ்புல் முஜாகிதீன் ஆதரவு பெற்ற பத்திரிக்கை இந்துக்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறவேணுமென எச்சரிக்கை கொடுத்தது.
1990 பெப்ரவரி 4ஆம் திகதி பாகிஸ்தானிய பிரதமர் பெனாசிர் பூட்டோ அவசரமாக அனைத்துக்கட்சி தலைவர்களை கூட்டி காஷ்மீர் நிலவரத்தை விவாதித்தார், பிப்ரவரி 5ஆம் திகதி காஷ்மீர் தின நாளாக அறிவித்தார்.
அன்றிலிருந்து இந்தத் தினம் இந்திய மத்திய அரசை இலக்குவைத்தே அனுஷ்டிக்கப்படுகின்றது.
எனினும், பிரதமர் நரேந்திரமோடியின் ஆட்சிக்காலத்தில், 370 சிறப்பு சட்டம் நீக்கப்பட்டதோடு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றப்பட்டது.
காஷ்மீருக்கான தனிக்கொடி நீக்கப்பட்டு காஷ்மீர் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்திய தேசியக்கொடி பறக்கவிடப்பட்டது.
பிரிவினைவாத எண்ணம் கொண்ட இளைஞர்களை வைத்து இராணுவத்தின் மீது கல்லெறிந்தது முற்றிலும் தடுக்கப்பட்டது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு காஷ்மீரின் அனைத்து தரப்பு மக்களுக்கும் மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் முழுமையாக கொண்டு சேர்க்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் ஏனைய பகுதி மக்களுக்கு காஷ்மீரில் இடம் வாங்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதோடு, காஷ்மீரில் பிறந்த பெண் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் பிறந்த ஆடவரை திருமணம் செய்தால் அவர்களுக்கு காஷ்மீரில் சொத்துக்கள் வாங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் அகற்றப்பட்டு விட்டது.
அதுமட்டுமன்றி, காஷ்மீர் இந்தியாவின் மத்திய பொருளாதாரத்துக்கு பங்களிப்புச் செய்வதோடு, அப்பிராந்தியத்தின் வளர்ச்சியும் ஏனைய மாநிலங்களைப்போன்றே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு, காஷ்மீர் அனைத்து வழிகளிலும் முன்னேற்றம் கண்டும், அமைதியும், நிரந்தமான சமாதானமும் நீடித்த பூமியாக இருக்கையில் தான், குறித்த நட்புறவு தினத்தினை பெயரில் பாகிஸ்தான் மாறுபட்ட சிந்தனையை புகுத்துவதற்க தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது.
தெற்காசியாவிலும் அதற்கு அப்பாலும் பாகிஸ்தான் ‘பயங்கரவாதத்தின் மையமாக’ உள்ளது என்பது உலகறிந்த உண்மை. அவ்விதமான நாடொன்று காஷ்மீர் பற்றி தவறான கதையைப் பரப்புவதற்காக இவ்விதமான தினங்களை பயன்படுத்தவது மூன்றாந்தரமான நிலைமையாகும்.
மேலும், காஷ்மீர் குறித்து பாகிஸ்தானின் பிற்போக்கு சிந்தனையை அடியொற்றிய அறிப்பொன்று அண்மையில் அம்பலமாகியிருக்கின்றது.
அதாவது, கடந்த பெப்ரவரி ஐந்தாம் திகதி நடைபெற்று நட்புறவு தினத்திற்கு முன்னைய நாட்களில் பாகிஸ்தான் மத்திய அரசாங்கத்திடமிருந்து அனைத்து இராஜதந்திர கட்டமைப்புக்களும் தகவலொன்று அனுப்பபட்டுள்ளது.
அதில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சு வெளிநாடுகளில் உள்ள (இந்தியா தவிர) தங்கள் நாட்டின் தூதரகங்களுக்கு அனுப்பியுள்ள தகவலில், காஷ்மீர் ஒற்றுமை தினம் தொடர்பாக அறிக்கை, டுவிட்டரில் பதிவுகள் பதிவிடவேண்டும்.
இந்திய அரசுக்கும், இந்திய இராணுவத்திற்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் இவ்விதமான செயற்பாடுகள் காஷ்மீருடனான நட்புறவை ஏற்படுத்தப்போவதில்லை. அங்கு ஏற்பட்டுள்ள அமைதி மற்றும் வளர்ச்சிகளை வலுப்படுத்தப்போவதில்லை.
ஜம்மு காஷ்மீரில் பொதுமக்கள் இலக்குகளுக்கு எதிரான வன்முறைகள் குறைந்துள்ளதாகவும், சுற்றுலாப்பயணிகள் படிப்படியாக பிரபலமான பகுதிகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளதை நீடிப்பதற்கு இடமளிக்கப்போவதில்லை.
மாறாக, அவற்றை சீர்குலைக்கவே வித்திடப்போகின்றது. ஏலவே, மூன்று தசாப்தங்களாக, ஸ்ரீநகர் பெருநகர் காஷ்மீரின் கிளர்ச்சியின் மையமாக இருந்துள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரின் பகுதி பயங்கரவாதிகளுக்கு அடைக்கலமாக மாறியுமுள்ளது. அவ்விதமான நிலைமைகள் தொடர்வதற்கு தான் பாகிஸ்தான் காஷ்மீர் நட்புறவு தினத்தினைப் பயன்படுத்தப்போகின்றதா என்பது தான் இங்கு பிரதான கேள்வியாகின்றது.