சட்டத்தின் பிரகாரம் நிர்ணயிக்கப்பட்ட திகதியில் தேர்தலை நடத்தாமல் பிற்போடுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.
அனைத்துத் தேர்தல்களும் இலங்கையின் ஜனநாயகச் செயற்பாட்டின் இன்றியமையாத அங்கம் என்றும் அவை தடைப்படக் கூடாது என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பொது நிதி என கூறிக்கொண்டு அரசாங்கத்தினால் சமீபத்திய வாரங்களில் எடுக்கப்பட்ட பல முடிவுகள் தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் வகையில் இருப்பதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை மக்களின் இறைமை, சட்டத்தால் கட்டாயப்படுத்தப்பட்ட தேர்தல்லை தடுப்பதற்கான இத்தகைய முயற்சிகள் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியின் மீதான முன்னோடியில்லாத தாக்குதலைப் பிரதிபலிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு அமைவாக, சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களை நடத்துவதற்குரிய சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.