தேர்தலை நடத்தப்போவதில்லை என ஜனாதிபதி மறைமுகமாக தெரிவித்துள்ளமை அரசியல் அமைப்பு மற்றும் தேர்தல் தொடர்பான சட்டங்களை மீறும் நடவடிக்கை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டிற்கு சட்டத்தின் ஆட்சி முக்கியமானது என குறிப்பிட்ட அவர், நிர்வாகத்தை சீர்குலைப்பதன் மூலம் சர்வதேச உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் இதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், தேர்தலை நடத்தாமல் அரசியலமைப்பை மீறும் ஜனநாயக விரோத செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக எரான் விக்ரமரத்ன குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் 2022ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 2023ஆம் ஆண்டு தேர்தலை நடத்துவதற்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார்
2010 மே மாதத் தேர்தலுக்கான அச்சு செலவுகள் தேர்தல் முடிந்து நான்கு மாதங்களுக்குப் பின்னரும் 2015 பொதுத் தேர்தலுக்கான செலவுகள் அந்த வருடம் ஒக்டோபரிலும் 2019 ஜனாதிபதித் தேர்தல் செலவுகள் 8 மாதங்களுக்குப் பின்னர் வழங்கப்பட்டமையும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, அச்சிடுவதற்கு தேவையான அனைத்து ஆதாரங்களும் இருந்தும், முன்கூட்டியே பணம் செலுத்தாமல் வாக்குச் சீட்டுகளை அச்சிட முடியாது என அறிவிப்பது, தேர்தலை ஒத்திவைக்க தடைகளை ஏற்படுத்தும் தந்திரம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.