உக்ரைன் போருக்காக ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்க சீனா பரிசீலித்து வருவதாக, அமெரிக்க இராஜங்க செயலாளர் அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
ஆனால், ரஷ்யா இராணுவ தளவாடங்களை கோரியதாக வெளியான தகவலை சீனா முற்றாக மறுத்துள்ளது.
மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் சீனாவின் உயர்மட்ட இராஜதந்திரி வாங் யீயை சந்தித்த பின்னர் ஆண்டனி பிளிங்கன் இந்த கருத்தினை வெளியிட்டார்.
இந்த சந்திப்பின் போது, ரஷ்யாவிற்கு சீனா ஆபத்தான பொருள் ஆதரவை வழங்கும் சாத்தியம் குறித்து ஆழ்ந்த கவலைகளை தெரிவித்ததாக அவர் கூறினார்.
சீனாவின் சாத்தியமான திட்டங்கள் குறித்து அமெரிக்காவுக்கு என்ன தகவல் கிடைத்தது என்பதை அவர் விபரிக்கவில்லை.
சீனா ரஷ்யாவுக்கு என்ன கொடுக்கக்கூடும் என்று அமெரிக்கா நம்புகிறது என்று கேட்டபோது, அது முதன்மையாக ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளாக இருக்கும் என்று அவர் கூறினார். மேலும், இந்த அதிகரிப்பு சீனாவிற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்தார்.
இதனிடையே ரஷ்யாவுடனான உறவுகள் தொடர்பாக அமெரிக்காவிடமிருந்து வற்புறுத்தலை ஏற்க மாட்டோம் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நெருங்கிய நண்பரான சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங், ரஷ்யாவின் படையெடுப்பை இன்னும் கண்டிக்கவில்லை. ஆனால் அவர் மோதலில் நடுநிலையாக இருக்க முயன்றார் மற்றும் அமைதிக்கு அழைப்பு விடுத்தார்.