அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ரஷ்யா அறிவித்துள்ள நிலையில், உக்ரைனை எவராலும் வீழ்த்த முடியாது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஒரு வருடத்திற்கு முன்பு, உக்ரைனின் வீழ்ச்சிக்காக உலகம் காத்துக் கொண்டிருந்த போதும் உக்ரைன் வலுவாகவும் சுதந்திரமாகவும் போராடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் தலைநகர் கீவ் விற்கு 5 மணிநேர போர்நிறுத்த காலத்தில் இரகசியமாகப் பயணித்து திரும்பிய ஜோ பைடன், போலந்து ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.
உக்ரைனுடன் நேட்டோவின் மிக நீண்ட எல்லையைக் கொண்டுள்ள போலந்து, ஆயுதங்கள் மற்றும் அகதிகளுக்கான முக்கிய பாதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் போலந்தின் பாதுகாப்பு மற்றும் அங்குள்ள நேட்டோ வளங்களை அதிகரிப்பது குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உலகின் இரு முக்கிய அணுசக்தி நாடுகளுக்கு இடையிலான கடைசி அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் 2026 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது.
இருப்பினும் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கான முடிவை ரஷ்யா திரும்பப் பெற வேண்டும் என பிரான்சும் பிரித்தானியாவும் அழைப்பு விடுத்துள்ளன.
மேற்கத்திய நாடுகள் மோதலை தீவிரப்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ள ரஷ்ய ஜனாதிபதி, தமது நோக்கங்களை அடைய தொடர்ந்து போராடுவோம் என்றும் உறுதியளித்துள்ளார்.