தமது ஆட்சி காலத்தில் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தவும், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யவும் சீனா, இந்தியா மற்றும் பிராந்தியத்தில் உள்ள அனைத்து முக்கிய நாடுகளுடன் நல்ல உறவுகளைப் பேணுவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை தனது சுதந்திரத்தை வலுவாகப் பாதுகாப்பதாகவும், சுதந்திர நாடாக இருப்பதற்கு வெளியுறவுக் கொள்கை மிகவும் முக்கியமானது என்றும் ஆகவே ஐ.நா.வுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையினரில் தற்போது இலங்கையின் பங்கு பிராந்திய நாடுகளை விட மிகவும் குறைவாக இருப்பதாகவும், நல்லாட்சி அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் அது வீழ்ச்சியடைந்து வருவதாகவும் எரான் விக்கிரமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக பொறுப்புக்கூறல் நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்த தற்போதைய அரசாங்கம் தவறுமானால் இலங்கையை முன்னேற்ற முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உலக சந்தைகளில் பொருளாதாரம் தங்கியிருக்கும் நிலையில் இலங்கையர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த, உள்ளூர் பொருட்கள் மற்றும் சேவைகள் உலக சந்தையில் விற்கப்பட வேண்டும் என்றும் எரான் விக்கிரமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.