மகளிருக்கான ரி-20 உலகக்கிண்ணத் தொடரில், ஆறாவது முறையாக அவுஸ்ரேலிய அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.
கேப் டவுணில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நடப்பு சம்பியன் என்ற அந்தஸ்துடன் அவுஸ்ரேலிய அணியும், தொடரை நடத்தும் தென்னாபிரிக்கா அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மூனி ஆட்டமிழக்காது 74 ஓட்டங்களையும் கார்ட்னர் 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார்.
தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், இஸ்மயில் மற்றும் காப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ம்லாபா மற்றும் ட்ரையோன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 157 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தென்னாபிரிக்கா அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், அவுஸ்ரேலியா அணி, 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, லாரா வோல்வார்ட் 61 ஓட்டங்களையும் ட்ரையோன் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அவுஸ்ரேலியா அணியின் பந்துவீச்சில், மேகன் ஷட், கார்ட்னர், பிரவுண் மற்றும் ஜொனாசென் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகியாக, பெத் மூனி தெரிவுசெய்யப்பட்டதோடு, தொடரின் நாயகியாக ஆஷ்லே கார்ட்னர் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டார்.