சுயாதீன ஆணைக்குழு என்பதால் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தன்னிச்சையாக செயற்பட முடியாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் இராஜாங்க அமைச்சர் சானக வகும்பர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்துடன் எவ்வித பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்காமல் அவர்கள் தீர்மானங்களை அறிவிக்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் தற்போது கருத்துரைக்கும் எதிர்தரப்பினர் தான் 2018ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலை காலவரையறையின்றி பிற்போடுவதற்கு துணைசென்றார்கள்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எந்த தேர்தலையும் பிற்போடவில்லை. தேர்தலில் தோல்வியடையும் சூழல் காணப்பட்ட போதும் அவர் தேர்தலை நடத்தி மக்களாணைக்கு மதிப்பளித்தார்.
ஜனாதிபதியின் பதவி காலத்தை எதிர்தரப்பினர் சவாலுக்கு உட்படுத்துகிறார்கள்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் அல்ல அவர் நாடாளுமன்றத்தின் 134 உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்டவர் ஆகவே அவர் எவ்வாறு நிறைவேற்று அதிகாரத்தை செயற்படுத்த முடியும் என குறிப்பிடுகிறார்கள்.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ கொலை செய்யப்பட்டதை தொடர்பில் டி.பி. விஜேதுங்க நாடாளுமன்றத்தின் ஊடாக இடைக்கால ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
அவர் நிறைவேற்றுத்துறை அதிகாரத்தை பயன்படுத்தி யுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.
ஆகவே ஜனாதிபதி பதவி விவகாரத்தில் மக்களால் தெரிவு, நாடாளுமன்ற தெரிவு என வேறுபாடுகள் கிடையாது.“ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.