தேர்தலுக்கான நிதியை வழங்க முடியாது என்று நிதி அமைச்சு கூறவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் தற்போதைய நிலைமையில் நிதியை வழங்குவதில் காணப்படும் சவால்கள் தொடர்பிலேயே கூறுகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வேண்டாம் என்று நிதி அமைச்சோ, திறைசேரியோ தீர்மானிக்கவில்லை எனவும், தற்போதைய சவால்கள் தொடர்பில் ஆராய்ந்தே கதைக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வருமானத்திற்கும் செலவுக்கும் இடையே வேறுபாடுகள் இருக்கின்றன. வருமானத்தை விடவும் செலவு அதிகமாகவே உள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.
மார்ச் மாதத்திலேயே அதிகளவில் செலவுகள் உள்ளன. அரச ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதிய கொடுப்பனவு, கடன் மீளச் செலுத்துகை, மருத்துவ வழங்கல், பாடசாலை மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை விநியோகித்தல், உர விநியோகம் ஆகியவற்றை செய்ய வேண்டும். இவற்றுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.