உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நிதியை வழங்குவதற்கு தொடர்ந்தும் நிதி அமைச்சு மறுக்குமாக இருந்தால், நீதிமன்றத்தை அவமதித்தமை குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றத்தை மீண்டும் நாடுவோம் என ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்துக்கான பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மாகாண சபைகள் தேர்தல் நான்கு வருடங்களாக நடத்தப்படாதுள்ளதனை சுட்டிக்காட்டிய அவர், இம்மாதத்தில் உள்ளூராட்சி சபைகளை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி இல்லை என சுட்டிக்காட்டிய அவர், அரசியலமைப்பு ரீதியில் நியமிக்கப்பட்டவரே தற்போதுள்ளதாக குறிப்பிட்டார்.
அத்துடன் இந்த நாடாளுமன்றமும் இப்போது மக்கள் ஆணையை இழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.