கருங்கடலில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க ஆளில்லா விமானத்தின் எச்சங்களை கண்டுபிடிக்க முயற்சிப்பதாக, ரஷ்யா தெரிவித்துள்ளது.
குறித்த எச்சங்களை கண்டுபிடிக்க முடியுமா இல்லையா என்பது தனக்கு தெரியவில்லை என்றாலும் அதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக, ரஷ்ய பாதுகாப்பு சபையின் செயலாளர் நிகோலாய் பட்ருஷேவ் தெரிவித்துள்ளார்.
மேலும், கருங்கடலில் ஆளில்லா விமானம் இருப்பது அமெரிக்கா நேரடியாக போரில் ஈடுபட்டது என்பதை உறுதிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
அமெரிக்காவும் விமானத்தைத் தேடி வருவதாகவும் சிலவேளை ரஷ்யா ஆளில்லா விமானத்தின் எச்சங்களை கண்டுபிடித்தால், பயனுள்ள நுண்ணறிவு பறிபோய்விடும் அபாயம் இருப்பதாகவும் அமெரிக்க மூத்த அதிகாரி ஜோன் கிர்பி தெரிவித்தார்.
ஆளில்லா விமானம் விழுந்த இடத்தில் தண்ணீர் 4,000 அடி முதல் 5,000 அடி (1,200 மீ முதல் 1,500 மீ) ஆழம் இருப்பதாகவும் ஆகவே, ஆளில்லா விமானத்தை கண்டுபிடிப்பது சவாலானது எனவும் அவர் குறிப்பிட்;டார்.
நேற்று முன் தினம் (செவ்வாய்கிழமை) காலை அமெரிக்காவின் எம்.க்யு-09 ரீப்பர் ஆளில்லா விமானம், கருங்கடல் பகுதியில் விழுந்து நொறுங்கியது.
இந்த ஆளில்லா விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன்னர், ரஷ்யாவின் இரண்டு எஸ்.யு-27 போர் விமானங்கள், மேலும் பின்னுமாக அமெரிக்க ஆளில்லா விமானத்தை சுமார் 30-40 நிமிடங்கள் பின்தொடர்ந்து, ஆளில்லா விமானம் பறக்க முடியாத அளவு மற்றும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு எரிபொருளைக் கொட்டியதாகவும் இதனால், குறித்த ஆளில்லா விமானம் கட்டுப்பாட்டை இழந்து கருங்கடலில் விழுந்து நொறுங்கியதாகவும் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் குற்றஞ்சாட்டினர். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை ரஷ்யா முழுமையாக மறுத்துள்ளது.