இரு நாடுகளும் இராஜதந்திர உறவுகளை மீட்டெடுக்க ஒப்புக்கொண்ட ஒரு வாரத்திற்குள், ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை உத்தியோகபூர்வ விஜயத்திற்கு சவுதி அரேபியா அழைத்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இந்த அழைப்பிதழ் மன்னர் சல்மானின் கடிதத்தில் வந்ததாக கூறப்படுகிறது, ஆனால் சவுதியால் இன்னும் இது உறுதிப்படுத்தப்படவில்லை.
இரு நாடுகளும் வெளியுறவு அமைச்சர் மட்டத்தில் சந்திப்பை நடத்த ஒப்புக்கொண்டதாகவும், மூன்று சாத்தியமான இடங்கள் முன்மொழியப்பட்டதாகவும் ஈரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் தெரிவித்துள்ளார்.
ஆனால், இச்சந்திப்பு எப்போது நடைபெறும் மற்றும் நடைபெறும் இடம் உள்ளிட்ட விடயங்களை குறிப்பிடவில்லை.
மத்திய கிழக்கு பிராந்திய போட்டியாளர்களான ஈரான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய இரு நாடுகளும், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, இராஜதந்திர உறவுகளை மீட்டெடுக்க அண்மையில் ஒப்புக்கொண்டன.
துண்டிக்கப்பட்ட உறவுகளை மீட்டெடுக்க இரு நாடுகளும் இடையே சீனா, மேற்கொண்ட நான்கு நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இது சாத்தியமாகியது.
நல்லிணக்கத்திற்கான முயற்சியில் இரண்டு மாதங்களுக்குள் தூதரகங்களை மீண்டும் திறப்பதாகவும், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை மீண்டும் ஏற்படுத்துவதாகவும் இருவரும் அறிவித்துள்ளனர்.
நல்லிணக்கத்திற்கான முந்தைய முயற்சிகள் பலனளிக்காததால், இந்த வளர்ச்சியை அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உட்பட பலர் எச்சரிக்கையுடன் வரவேற்றனர்.
மத்திய கிழக்கின் சமீபகால வரலாறு இரு நாடுகளுக்கும் இடையிலான பகைமையால் ஆதிக்கம் செலுத்துகிறது. பிராந்தியத்தின் புவிசார் அரசியலை மறுவடிவமைக்கக்கூடிய முன்னெடுப்புக்கு இடைத்தரகாக சீனா செயற்பட்டது.
சவுதி ஒரு முக்கிய ஷியா முஸ்லீம் மதகுருவை தூக்கிலிட்டதைத் தொடர்ந்து ஈரானில் உள்ள அதன் தூதரகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கியதை அடுத்து, ஜனவரி 2016இல் சவுதி அரேபியா உறவுகளை துண்டித்தது.
சன்னி மற்றும் ஷியா தலைமையிலான அண்டை நாடுகளுக்கு இடையே அடிக்கடி பதற்றம் இருந்து வருகிறது. அவர்கள் ஒருவரையொருவர் பிராந்திய மேலாதிக்கத்தை தேடும் ஒரு அச்சுறுத்தும் சக்தியாக கருதுகின்றனர்.