அமெரிக்காவில் நடைபெற்ற இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர், இனிதே நிறைவுப் பெற்றுள்ளது.
இந்த தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், கார்லோஸ் அல்கராஸ் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றார்.
சம்பியன் பட்டத்துக்கான இறுதிப் போட்டியில், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், ரஷ்யாவின் டேனில் மெட்வேடவ்வை எதிர்கொண்டார்.
இப்போட்டியில், சிறப்பாக விளையாடிய கார்லோஸ் அல்கராஸ், 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றார்.
உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரரான 19 வயதான இளம் வீரர் கார்லோஸ் அல்கராஸூக்கு இது முதல் மாஸ்டர்ஸ் டென்னிஸ் சம்பியன் பட்டமாகும். அவர் இதுவரை ஒட்டுமொத்தமாக எட்டு சம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். இதில் 2022ஆம் ஆண்டு அமெரிக்க பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டமும் அடங்கும்.
இதேபோல பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில், கஸகஸ்தானின் எலெனா ரைபகினா சம்பியன் பட்டத்தை வென்றார்.
இறுதிப் போட்டியில், கஸகஸ்தானின் எலெனா ரைபகினா, பெலராஸின் அரினா சபலெங்காவுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், எலெனா ரைபகினா, 7-6, 6-4 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றார்.
2022ஆம் ஆண்டு விம்பிள்டன் சம்பியன், 2023ஆம் ஆண்டு அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் இறுதிப் போட்டியாளர் என சமீப காலங்களில் சிறப்பாக விளையாடிவரும் எலெனா ரைபகினாவுக்கு இது முதல் மாஸ்டர்ஸ் டென்னிஸ் சம்பியன் பட்டமாகும்.
உலகின் ஏழாவது நிலை டென்னிஸ் வீராங்கனையான, 23 வயது எலெனா ரைபகினா இதுவரை ஒற்றையர் பிரிவில் ஒட்டுமொத்தமாக நான்கு சம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.