நாடாளுமன்ற உறுப்பினர்களதும், நாடாளுமன்றத்தினதும் சிறப்புரிமை மீறப்படுகின்றமை தொடர்பில் விசாரணை செய்து, பரிந்துரைகளை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிப்பது தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த பிரேரணையை நிறைவேற்றிக்கொள்ள ஆளும் கட்சி முயற்சித்தது.
இதன் போது, பிரேரணை தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்தார்.
பிரேரணை தொடர்பில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் போது, பிரேணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும், எதிராக 43 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதற்கமைய, 32 மேலதிக வாக்குகளால் குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, சுதந்திர மக்கள் கூட்டணி மற்றும் மேலவை இலங்கை கூட்டணி ஆகிய கட்சிகள் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்பன வாக்கெடுப்பின் போது சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.