சீனாவில் ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் திபெத்தியர்கள் மற்றும் பிற சிறுபான்மை குழுக்களுக்கு தங்கள் ஒற்றுமையைக் காட்ட திபெத் சார்பு மற்றும் மனித உரிமைகள் குழுக்கள் தைபேயில் அணிவகுப்பு நடத்தியுள்ளன.
இம்முறை தைபே நகர மண்டபத்தை நோக்கி முன்னெடுக்கப்பட்ட அணிவகுப்பானது, ஹொங்கொங்காரர்கள் மற்றும் ஜின்ஷியாங்கில் உள்ள மக்களின் அவலநிலையை வெளிப்படுத்துவதை நோக்காக கொண்டிருந்தது என்று அமைப்பாளர் ஒருவர் கூறினார்
அத்துடன், அணிவகுப்பு பற்றிய அறிக்கையின்படி தாய்வானியர்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தைபே டைம்ஸின் தகவல்களின் படி, 1959ஆண்டு தொடங்கிய சீன ஆட்சிக்கு எதிரான திபெத்திய எழுச்சியின் போது இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் 2004 முதல் ஆண்டுதோறும் மார்ச் மாத தொடக்கத்தில் இந்த நிகழ்வு நடத்தப்படுகின்றது.
அத்துடன் இம்முறை, தாய்வானுக்கான நாடுகடத்தப்பட்ட திபெத்திய அரசாங்கத்தின் பிரதிநிதி கெல்சாங் கியால்ட்சென் பாவா, சீன அரசாங்கத்தின் அடக்குமுறையை எதிர்கொள்பவர்களிடமிருந்து தாய்வானியர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
தைபேயில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய கெல்சாங் கியால்ட்சென், தாய்வான் ஜனநாயகத்தின் கலங்கரை விளக்கம் என்றும், திபெத், ஜின்ஷியாங் மற்றும் ஹொங்கொங் போன்றன அதே பாதையில் செல்லக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.
தலாய் லாமாவின் திபெத் மத அறக்கட்டளையின் தலைவரான கெல்சாங் கியால்ட்சென், 1950ஆம் ஆண்டில் திபெத்தை சீனா ஆக்கிரமித்ததாகவும், ஒரு வருடம் கழித்து திபெத்தை சீனாவிற்கு ‘திரும்ப’ பதினேழு விடய ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளுமாறு திபெத்தியர்களை கட்டாயப்படுத்தியதாகவும் கூறினார்.
பீஜிங்கில் ஒரு ஒப்பந்தத்தில் மதங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் மதிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள ஷரத்துகளை மீறியுள்ளதாக கூறிய அவர் திபெத்தை அடிப்படையிலேயே மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட கொள்கைகளை பீஜிங் செயற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த மாற்றங்கள் மார்ச் 1959 இல் சீன அரசாங்கத்திற்கு எதிராக திபெத்தியர்களின் எழுச்சிக்கு வழிவகுத்தன என்று கெல்சாங் கியால்ட்சென் கூறினார்.
திபெத்தின் நிலைமை மோசமடைந்துள்ளது மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் அரசாங்கத்தின் கீழ் திபெத்தியர்கள் கலாசார அழிவை எதிர்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.