இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகை தந்திருந்த ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், டில்லியில் உள்ள வீதிக் கடையொன்றில் தேநீர் அருந்திய புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் உள்ள ஜேர்மன் உயர்ஸ்தானிகரகம் இந்த புகைப்படத்தினை வெளியிட்டுள்ளது.
டெல்லியின் சாணக்யபுரியில் உள்ள தங்களுக்குப் பிடித்த தேநீர்க் கடைக்கு ஸ்கோல்ஸை அழைத்துச் சென்றதாகவும், மேலும் அவர் ‘ருசியான தேநீரை’ ருசித்தார் என்றும் உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
‘ருசியான சாயா இல்லாமல் இந்தியாவை எப்படி அனுபவிக்க முடியும்? அதனால் வீதிக்கடைக்கு நாம் சென்றோம்.
தேநீர் அருந்தினோம். நீங்கள் அனைவரும் செல்ல வேண்டும்! இந்தியாவின் உண்மையான சுவையை அனுபவிக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவும் இந்தியர்களும் ஜேர்மனியின் இந்த செயற்பாட்டை பாராட்டுகிறார்கள். ஒன்றாக வளர்வோம். முன்னேற்றத்தின் கூட்டாண்மையாக இருப்போம்.
இரு நாடுகளுக்கும் மேலும் வளரவேண்டும். அவர் தென்னிந்தியாவின் பில்டர் கோப்பியையும் முயற்சிக்க வேண்டும் என்று பின்னூட்டமொன்றும் இடப்பட்டுள்ளது.
இதேவேளை, பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்திற்கு சென்ற ஜேர்மன் அதிபர், ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களுர் அணியின் ஆண்கள் மற்றும் பெண் வீரர்களுடன் கலந்துரையாடினார்.
இந்தியாவிற்கு முதல் பயணம் செய்த ஜேர்மன் அதிபருக்கு பிரதமர் மோடி ராஷ்டிரபதி பவனில் வரவேற்பு அளித்தார், ஜேர்மன் அதிபருக்கு ‘மேகாலயா ஸ்டோல்’ மற்றும் ‘நாகலாந்து சால்வை’ ஒன்றையும் பரிசாக வழங்கினார்.