தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அதேபோல் தான் ஒருபோதும் பிரச்சித்தமான தீர்மானங்களை மேற்கொள்ளப் போவதில்லை எனவும், மாறாக சரியான தீர்மானங்களையே எடுப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, பிரசித்தமான தீர்மானங்களினால் நாட்டிற்கு சீரழிவு மட்டுமே ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
முப்படைகளினதும் தலைவரான ஜனாதிபதி, அநுராதபுரத்திலுள்ள விமானப்படை முகாமில் இன்று (சனிக்கிழமை) முப்படையினருக்கான சிறப்புரை ஆற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்துச் சுதந்திரத்திற்கமைய தன்னை விமர்சிக்க அனைவருக்கும் சுதந்திரம் உள்ளதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வீதிகளில் வன்முறைகளை மேற்கொள்ள எவருக்கும் உரிமை இல்லை எனவும் வலியுறுத்தினார்.
சரியானதை செய்ய அனைவரும் பழகிக்கொள்ள வேண்டும் என்றும், அதற்கான சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளதாக என்பதை அறியவே, சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடுகளை முதலில் நாடாளுமன்றத்தில் சமர்பித்ததாகவும் தெரிவித்தார்.
அதனை உதாரணமாக கொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களை நடைமுறைப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் புதிய சிந்தனைகளுடன் புதிய பயணத்தை தொடர்ந்தால் 25 வருடங்களுக்குள் பெரும் அபிருத்தியை அடைய முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பயங்கரவாதத்தை வெற்றிகொண்டது போன்றே நாட்டின் பொருளாதார யுத்தத்தையும் வெற்றிகொண்டு பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த துரித நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.
அதற்காக முப்படைகளினதும் பொலிஸாரினதும் ஒத்துழைப்பு தொடர்ச்சியாக தேவையென வலியுறுத்திய ஜனாதிபதி, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கடந்த காலங்களில் படையினர் வழங்கிய ஒத்துழைப்புக்களையும் பராட்டினார்.
முப்படையினர் இந்தப் பணியை செய்யத் தவறியிருந்தால் இன்று நாடு வன்முறை நிறைந்த பூமியமாக இருந்திருக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அதேபோல் உலகின் பலம்வாய்ந்த நாடுகளுக்கிடையில் இடையிலான போட்டித் தன்மை, இந்து சமுத்திர வலயத்தை பெரிதும் பாதிக்கும் எனவும் இலங்கையின் ஜனாதிபதி என்ற வகையில் அந்த பாதிப்பிலிருந்து இலங்கையை மீட்க முயற்சிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நடத்து முடிந்த போராட்டங்களை போல் அல்லாது எதிர்காலத்தில் வரவிருக்கும் இந்த போராட்டங்கள் தொழில்நுட்பத்தை மையப்படுத்தியதாக அமையும் என வலியுறுத்திய ஜனாதிபதி, தொழில்நுட்ப தெரிவுடன் கூடிய முப்படையினரை உருவாக்குவதற்காகவே “பாதுகாப்பு – 2023“ (Defense – 2023) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் சட்டம் ஒழுங்கு மற்றும் நீதி அமைச்சர்களுக்கு இது தொடர்பான பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக படையினரின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.