இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று இடம்பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணியின் தலைவர் ஸ்ரேயர் ஐயர் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
அதன்படி களம் இறங்கிய பஞ்சாபி அணி 20 ஓவர்கள் முடிவில் 05 விக்கெட் இழப்பிற்கு 191 ஓட்டங்களை எடுக்க எதிரணிக்கு 192 ஓட்டங்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பானுக ராஜபக்ஷ 32 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பெற்ற அதேவேளை ஷிகர் தவான் 40 ஓட்டங்களையும் சாம் கரன் ஆட்டமிழக்காமல் 26 ஓட்டங்களையும் எடுத்தனர்.
பதிலுக்கு களம் இறங்கிய கொல்கத்தா அணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்க தவறியதால் அடுத்தடுத்து விக்கெட்கள் பறிபோக மழையும் குறுக்கிட்டது.
இதனால் கொல்கத்தா அணிக்கு 16 ஓவர்களில் 154 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது, ஆனால் டக்வொர்த் லூயிஸ் கோட்பாட்டின் அடிப்படையில் 16 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 146 ரன்கள் எடுத்தது.