நேட்டோ நட்பு நாடுகளின் எல்லைகளுக்கு அருகில் தந்திரோபாய அணு ஆயுதங்களை நிலைநிறுத்த ரஷ்யா தீர்மானித்துள்ளது.
மேற்கு நாடுகளுடன் தொடர்ந்து பதற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், பெலாரஸ் நாட்டின் ரஷ்ய தூதர் போரிஸ் கிரிஸ்லோவ் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நாட்டின் மேற்கு எல்லைக்கு ஆயுதங்கள் நகர்த்தப்படும் என போரிஸ் கிரிஸ்லோவ் தெரிவித்தார்.
ஆயுதங்கள் எங்கு நிலைநிறுத்தப்படும் என்பதை சரியாகக் குறிப்பிடாமல், ஜூலை 1 ஆம் திகதிக்குள் இதற்கான பணிகள் நிறைவடையும் என கிரிஸ்லோவ் மேலும் தெரிவித்தார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் சோவியத் விரிவாக்கத்தைத் தடுக்க முதலில் நிறுவப்பட்ட இராணுவக் கூட்டணியான நேட்டோவின் உறுப்பு நாடுகளான லிதுவேனியா, லாட்வியா மற்றும் போலந்துடன் பெலாரஸ் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கின்றது.
கடந்த ஆண்டு பெப்ரவரியில் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா மற்றும் போலந்தில் நிலைகொண்டுள்ள தனது துருப்புக்களின் எண்ணிக்கையை நேட்டோ கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகரித்துள்ளது.
தந்திரோபாய அணு ஆயுதங்கள் மூலோபாய அணு ஆயுதங்களை விட குறுகிய வரம்பை கொண்டவை மற்றும் போர்க்களத்தில் மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களை மேற்கொள்ள இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.