பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை விட, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மோசமானது என்பதனால் இதனை எதிர்க்கும் ஆளுந்தரப்பு உறுப்பினர்களும் உள்ளதாக சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
ஆகவே அவர்களையும் இணைத்துக்கொண்டு, நாடாளுமன்றத்தில் இந்த சட்டமூலத்தை தோல்வியடைச் செய்வோம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
1979இல் தயாரிக்கப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தை விட மோசமான இந்த சட்டமூலம் அனைத்து வகையான ஜனநாயக உரிமையையும் நசுக்கும் வல்லமை கொண்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் சகல மாவட்டங்களிலும் 90 நாட்கள் தடுத்து வைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரிக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வாதிகார ஆட்சியை நாட்டில் ஏற்படுத்த இவ்வாறு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும் என்றும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.