வளமான மற்றும் ஒளிமயமான எதிர்காலத்துக்காக உறுதியுடன் அணிதிரள்வதற்கான வலிமையைப் பெற பிரார்த்திப்பதுடன் இருள் சூழ்ந்த யுகம் நீங்கி வளமான புத்தாண்டு மலரட்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் வெளியிடப்பட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு சூரியனின் பெயர்ச்சியுடன் ஆரம்பமாகும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு இந்நாட்டில் சிங்கள மற்றும் தமிழ் மக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறந்த கலாசார விழாவாகும்.
பல ஆண்டுகளாக, இலங்கை மக்கள் பல சவால்களுக்கு மத்தியில் புத்தாண்டைக் கொண்டாடினர்.
சிங்கள மற்றும் இந்து புத்தாண்டு சமூக உறவுகளை மேம்படுத்துவதற்கும் பழைய பழக்கவழக்கங்களைத் தொடரவும், ஒருவருக்கொருவர் பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்தவும் உதவுகிறது.
சமூகத்தில் நேர்மறை நற்பண்புகளையும் நெறிமுறைகளையும் புகுத்தும் மாபெரும் கலாசார விழாவாக விளங்கும் சிங்கள,இந்து புத்தாண்டு, மனித நல்லிணக்கத்திற்கான கதவுகளைத் திறக்கும் நல்லிணக்கப் பண்டிகையாகவும் அமைந்துள்ளது.
இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே பிரிக்க முடியாத பிணைப்பு உள்ளது. இதன் விளைவாக மனிதன் இயற்கைக்கு நன்றி செலுத்தும் வாய்ப்புகளை காண்கிறான். சிங்கள இந்து புத்தாண்டு என்பது நன்றியின் உண்மையான வடிவம் என்றும் பொருள்படும்.
தன்னிறைவு பெற்ற பொருளாதாரத்தை கொண்டிருந்த நம் நாடு, தற்போது கண்ணீர் வடிக்கும் நாடாக மாறியதோடு, புத்தாண்டை குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் கொண்டாடும் வாய்ப்பு கூட பல ஆண்டுகளாக இல்லாமல் போய்விட்டது.
எமது நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை நிலைமைகளுக்கு அசாதாரணமான சவால்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த இருள் சூழ்ந்த காலம் முடிந்து,நமது நாட்டின் ஒட்டுமொத்த குடிமக்களும் வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் வளமான மற்றும் ஒளிமயமான எதிர்காலத்திற்காக உறுதியுடன் அணிதிரள்வதற்கான வலிமையைப் பெற பிரார்த்திக்கிறேன்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.