பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கைவிட வேண்டும், வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் சிங்கள பௌத்த மயமாக்கலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்திய ஹர்த்தால் போராட்டத்திற்கு வவுனியாவில் முழுமையான ஆதரவு வழங்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
அந்தவகையில் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் நடமாட்டம் மிககுறைவாக காணப்படுகின்றது.
இதேவேளை அரச பேருந்துச்சேவைகள் வழமைபோல இடம்பெற்றிருந்ததுடன், தனியார் பேருந்துச்சேவைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்தது.
வெளிமாகாணங்களில் இருந்து வடக்கிற்குள் நுழையும் பேருந்துகள் வவுனியாவுடன் தமது சேவைகளை மட்டுப்படுத்தியிருந்தன.
இதேவேளை பாடசாலைகள் திறக்கப்பட்டிருந்த நிலையில் மாணவர்களின் வருகை இல்லாமையினால் கல்விச்செயற்பாடுகளும் முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்தது.
வங்கிகள், நிதி நிறுவனங்கள் திறக்கப்பட்டிருந்த நிலையில் பொதுமக்கள் இன்மையால் இயல்பான செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தது.
முற்சக்கரவண்டிகள் குறைந்தளவில் சேவையில் ஈடுபட்டிருந்தது. விவசாயிகள் தமது உற்பத்திகளை வீதியில் வைத்து விற்பனை செய்திருந்தனர்.
மாவட்டத்தின் புறநகர்ப்பகுதிகளான நெடுங்கேணி, செட்டிகுளம், கனகராயன்குளம் உட்பட ஏனைய உபநகரங்களின் வழமையான செயற்ப்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்திருந்ததுடன், வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில், வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் பொது முடக்கம் ஊடான எதிர்ப்புப் போராட்டத்திற்கு வவுனியாவில் தமிழ் மக்களும், சிவில் சமூக அமைப்புக்களும், மக்கள் பிரதிநிதிகளும் தமது முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றனர்.