வடக்கு மாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜாவின் உத்தரவை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர உதாசீனம் செய்த சம்பவம் நேற்று மாலை வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.
குறித்த கூட்டத்திற்கு வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கூட்டம் முடிந்த பின் 4.30 இற்கு ஊடக சந்திப்பு நடைபெறும் என மேலதிக மாவட்ட அரச அதிபர் தி.திரேஸ்குமாரால் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மாலை 4 மணியில் இருந்து மாலை 6 மணி வரை மண்டப வாயிலில் காத்திருந்த ஊடகவியலாளர்கள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது இடை நடுவில் வெளியேறிய வடக்கு மாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜாவிடம் ஊடக சுதந்திர நாளான இன்று எம்மை ஏன் மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு கூட்டத்திற்கு அனுமதிக்கவில்லை என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த ஆளுனர், நீங்கள் கூட்ட மண்டபத்திற்குள் வரவில்லையா. உங்களை அனுமதிக்கவில்லை என எனக்கு தெரியாது. மன்னித்துக் கொள்ளுங்கள்.
யார் வர வேண்டாம் என கூறியது என ஊடகவியலாளரிடம் கேள்வி எழுப்பிய அவர் நீங்கள் மண்டபத்திநற்கு செல்லுங்கள். நான் சொன்னதாக அரச அதிபரிடம் சொல்லுங்கள் எனக் கூறி அங்கு நின்ற இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானிடமும், பிரதிநிதிகளிடமும், அரச அதிபரிடமும் தெரியப்படுத்துமாறு கூறிவிட்டு சென்றிருந்தார்.
இராஜாங்க அமைச்சரின் பிரதிநிதிகள் குறித்த விடயத்தை அரச அதிபரிடம் தெரியப்படுத்தியும், ஆளுனரின் உத்தரவை கருத்தில் எடுக்காது கதவுகளை மூடி ஊடகவியலாளருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.