தையிட்டி விகாரை வழிபாட்டிற்கோ, விகாரையில் இடம்பெறும் உற்சவத்திற்கோ எந்தவித இடையூறும் ஏற்படுத்த கூடாது என மல்லாகம் நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது.
பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட ஐவரின் பெயர்கள் குறிப்பிட்டு மல்லாகம் நீதவான் நீதிமன்று கட்டளை வழங்கியுள்ளது.
ஒவ்வொருவரும் அமைதிக்கு பங்கம் விளைவிக்காத வகையில் செயற்பட வேண்டும்.
விகாரையின் முகப்பிலையோ, பாதையிலையோ தடைகளை ஏற்படுத்த கூடாது.
விகாரை வழிபாட்டிற்கு வரும் மக்களுக்கோ, விகாரையில் நடைபெறும் உற்சவங்களுக்கோ, இடையூரு ஏற்படுத்த கூடாது என நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.
அத்துடன் குறித்த வழக்கு எதிர்வரும் 11ஆம் திகதி மன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என மன்று திகதியிட்டுள்ளது.
இதேவேளை, நீதிமன்ற கட்டளையை மீறி நடமாடினால் கைது செய்வோம் என பலாலி பொலிஸார் போராட்டக்காரர்களை எச்சரித்துள்ளனர்.
இந்தநிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் நீதிமன்ற கட்டளை தெரியாத பொலிசார் உரையாடுவதாகவும், அவ்வாறு நாம் நடமாட முடியாதுவிடின் போராட்டக்களத்திற்கு வருகை தர தமக்காக ஒரு ஹெலிகொப்டரை வழங்குமாறு பொலிஸாரிடம் கோரியிருந்தார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் போராட்டக்களத்தில் நிற்பவர்களுக்கு என வழங்கிய நீராகாரத்தை தூக்கி வீசி அநாகரிகமாக நடந்து கொண்டமை அங்கிருந்தவர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தி இருந்தது.
போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு நேரில் சென்ற அங்கஜன், தனது ஆதரவை தெரிவிதத்துடன், அங்கிருந்தவர்களுக்கு குளிர்பானங்கள், பால் பாக்கெட் போன்ற நீராகாரங்களையும் பிஸ்கெட் வகைகளையும் வழங்கியிருந்தார்.
போராட்டக்களத்தில் இருந்து அங்கஜன் வெளியேறியதும், அவர்கள் கொடுத்தவை அருகில் உள்ள வேலி ஓரம் வீசப்பட்டு இருந்தது.
அதனை அவதானித்த அங்கிருந்தவர்கள், நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் காணப்படும் நிலையில், எவ்வளவோ பேர் உணவுக்காக ஏங்கி நிற்கும் நிலமை காணப்படுகின்ற இந்த கால பகுதியில்,
உணவு பொருட்களை வீசி எறிந்து அநாகரிகமாக செயற்பட்டவர்கள,; பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்க எந்த அருகதையும் அற்றவர்கள் என பலரும் கவலை தேய்ந்த குரலுடன் விசனம் தெரிவித்தனர்.
அதேவேளை போராட்ட களத்திற்கு ஆதரவு தெரிவிக்க சென்ற மக்கள் பிரதிநிதிகளை அங்கு நின்ற சிலர் அநாகரிகமாக பேசியும், அநாகரிகமாக அவர்கள் தொடர்பில் குரல் எழுப்பியும் குழப்பங்களை உண்டு பண்ணும் விதமாக செயற்பட்டமை தொடர்பிலும் பல மக்கள் பிரதிநிதிகள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
நினைவேந்தல் நிகழ்வுகள் மாத்திரமல்ல தமது போராட்டங்களுக்கு கூட ஏனைய அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகள் வர கூடாது என செயற்படுவது ஒரு அரசியல் நாகரீகமற்ற தன்மை என அரசியல்வாதிகள் பலரும் சலிப்புடன் சொல்லி போராட்ட களத்தில் இருந்து வெளியேறி சென்றமையும் குறிப்பிடத்தக்கது.