பாகிஸ்தான் இராணுவத்தின் அறியப்பட்ட வரலாற்றில் முதன்முறையாக, இரண்டு உயர்மட்ட ஜெனரல்கள் முரண்பட்டு போராட்டக்காரர்களுக்கு வாயிலைத்திறந்து விடுமளவிற்கு நிலைமைகள் மோசமடைந்திருக்கின்றன.
பாகிஸ்தான் இராணுவத்தின் பொதுத்தலைமையகம் (ஐஎஸ்ஐ) மற்றும் லாகூர் மற்றும் ராவல்பிண்டி கொமாண்டர்களின் வீடுகளில் நடந்த பல நிகழ்வுகள், பாகிஸ்தான் இராணுவத்தின் நற்பெயரை உள்நாட்டிலும், வெளிநாடுகளில் உள்ள பாதுகாப்பு அமைப்புகளின் மத்தியிலும் சீர்குலைத்துள்ளன.
இராணுவத்திடம் இருந்து இறுதி உத்தரவுகளைப்பெறும் புலனாய்வு அமைப்புகளால் பாதுகாக்கப்பட்ட ஒலிப்பதிவு உட்பட கிடைக்கக்கூடிய ஆதாரங்கள், ஜெனரல் அசிம் முனீர், எதிர்ப்பாளர்கள் தாக்கினால், அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த மாட்டார்கள் என்று முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில், 1971இல் போகட்டுப்பாட்டை இழந்த போதும் கூட இவ்வாறு நடக்கவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இராணுவத்துக்குள் உயர்மட்டத்தில் பிளவுபட்ட நிலையில், இராணுவம் ஒரு முன்னோடியில்லாத நகர்வுகளை முன்னெடுக்க முயல்கின்றது.
அதேநேரம், நீதித்துறையும் அதன் பினாமி போன்று இம்ரான் கானை அடக்குவதற்கான அதன் திட்டங்களை முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும் அது கைகூடவில்லை.
இராணுவ-சிவில் நிறுவனங்கள் இம்ரான் கானின் திறனைத் தவறாகக் கணக்கிட்டுள்ளன, இதனால் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பின் அரசாங்கத்தின் திறமையின்மை அம்பலமாகியுள்ளது.
எவ்வாறாயினும், நெருக்கடி கைமீறிப் போனால், ‘தேசிய அவசரநிலை’ உருவாகும் என்று எதிர்வு கூறப்படுகின்றது. இராணுவச் சட்டம் இல்லையென்றாலும், ஷெரீப்பை மாற்றியமைக்கும் ஒரு காபந்து அரசாங்கம், தோன்றலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
பாகிஸ்தானில் இரண்டு ஆண்டுகளுக்கு தேர்தல்கள் இல்லை என்பது உறுதியாகியுள்ள நிலையில் அந்நாட்டின் பொருளாதார அவசரநிலையை கடந்து செல்வது மிகப்பெரும் கடினமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.