ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்களது எண்ணம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
குண்டசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், நாட்டின் நலனுக்காக ஜனாதிபதி தமது கொள்கைகளை நடைமுறைப்படுத்த விரும்பினால் அவருடன் இணைந்து செயற்பட முடியும் என கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளதால், ஜனாதிபதியுடன் கொள்கை ரீதியான விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு தயாராக இருப்பதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு உடன்படிக்கையோ அல்லது கலந்துரையாடலோ கொள்கையின் அடிப்படையில் மட்டுமே அமைய வேண்டுமேயன்றி அரசாங்கத்தை நோக்கி உறுப்பினர்களை இழுக்கும் நோக்கத்துடன் இருக்க கூடாது என்றும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.