மத நல்லிணக்கத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வரும் குழுக்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்காக விசேட பொலிஸ் குழுவொன்றை அமைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தை சீர்குலைக்கும் வகையில் பல்வேறு தரப்பினர்களினால் இவ்வாறான செயற்பாடுகள் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதிக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கு அமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அலுவலக பிரதானி, தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன் மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து நாட்டு மக்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்தி நாட்டை மீண்டும் வீழ்ச்சியடையச் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய புதிய பொலிஸ் குழு மிக விரைவில் ஸ்தாபிக்கப்படும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.