கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் மென்டரின் பழப்பயிர்ச்செய்கைக்காக நிதி ஒதுக்க கமத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாட்டில் மன்டரின் தோடம்பழ வகைக்கு பெரும் கேள்வியுள்ள நிலையில், அவற்றை இறக்குமதி செய்வதற்காக பெருமளவு அந்நிய செலாவணி விரயமாவதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் புதிய பயிர்ச்செய்கைத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்துவதற்காக கமத்தொழில் அமைச்சில் நடாத்தப்பட்ட கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
2022 ஆம் ஆண்டில் 2,407 மெற்றிக் தொன் தோடம்பழங்களை இறக்குமதி செய்ய ரூ. 496 மில்லியன் அரசாங்கத்தால் செலவிடப்பட்டது. ஆனால் 2022 இற்கு முன்னர் இதைவிட அதிகளவு தோடம்பழம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 2019 இல் 7,773 மெற்றிக் தொன் தோடம்பழ இறக்குமதிக்காக ரூ. 949 மில்லியன் செலவிடப்பட்டது.
அதன்படி ரூ. 670 மில்லியன் மற்றும் ரூ. 735 மில்லியன் முறையே 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் செலவிடப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட தோடம்பழங்களில் மன்டரின் இன தோடம்பழமே அதிகமானதாகும் என அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையில் மன்டரின் பழ வகைகளை வளர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி சிறந்த பெறுபேறுகளை அளித்துள்ளது. ஆராய்ச்சியாளர்களின் கருத்தின்படி பதுளை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்கள் இப்பயிர்ச்செய்கைக்கு ஏற்றதாகும்.
இந்நாட்டில் விளைவிக்கக்கூடிய அனைத்து பயிர்களையும் பயிரிடுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். மன்டரின் பயிர்ச்செய்கை தொடர்பான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் இந்த வருடத்துக்குள் பயிர்ச்செய்கை வலயத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.