இலங்கையில் மாகாண சபைகளுக்கான தேர்தல் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகின்ற காலத்தில் நடத்தப்படாது கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆளும் தரப்பின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தன, மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துங்கள், இல்லாது விட்டால் வெள்ளை யானைகளாக உள்ள மாகாண சபைகளை கலைத்து விடுங்கள் என்று கூறியிருக்கின்றார்.
உண்மையில் மாகாண சபைகள் முறையானது இலங்கை, இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் அடிப்படையில் இலங்கையின் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 13ஆவது திருத்தத்திற்கு அமைவாகவே உருவாக்கப்பட்டதாகும்.
இந்த மாகாண சபைகள் முறையானது, வெறுமனே நிருவாகக் கட்டமைப்பு என்பதற்கு அப்பால், இலங்கையில் நீடித்துக்கொண்டிருந்த இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வினை எட்டும் வகையில் இந்திய மத்திய அரசாங்கத்தின் முன்மொழிவுடன் மேற்கொள்ளப்பட்டதொரு ஏற்பாடாகும்.
குறிப்பாக, தமிழர்கள் அதிகாரப்பகிர்வுக்காக போராட்டத்தினை ஆரம்பித்திருந்த நிலையில், நிலைமைகளை சுமூகமாக கையாளும் வகையில் இந்தியா தலையீடுகளைச்செய்து இந்திய, இலங்கை ஒப்பந்தத்தை அப்போதைய ஜே.ஆர். அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது என்பது வரலாறு.
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச ஒப்பந்தமே இந்திய,இலங்கை ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்ம் மேற்கொள்ளப்பட்டு தற்போது 35ஆண்டுகள் நிறைவுக்கு வந்தருக்கின்றன.ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளை முழுiயாக நடைமுறைப்படுத்துவதற்கு இன்னமும் தயாரில்லாத நிலைமையில் தான் இலங்கை அரசாங்கம் உள்ளது.
இதற்கு, சிங்கள மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு தமக்குச் சரிந்து விடும் என்ற ஆட்சியாளர்களின் அல்லது தென்னிலங்கைத் தலைவர்களின் அச்சம் தான் பிரதான காரணமாகும்.ஏனெனில் 1987ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட தருணத்தில் அப்போது பிரதமராக இருந்த ரணசிங்க பிரேமதாச, இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிரான நிலைப்பாட்டினை எடுத்திருந்தார்.
அவர் இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக தென்னிலங்கையில் தீவிரமான பிரசாரங்களைச் செய்தார். அந்தப் பிரசாரமான, தென்னிலங்கையில் பெரும்பன்மையாக உள்ள சிங்கள மக்கள் மத்தியில் வெகுவாக வேரூன்றியது.
அந்த நிலைமையானது, தென்னிலங்கை மக்களை இந்திய தேசத்துக்கு எதிரான வன்மங்கள் நிறைந்த மனோநிலையை உருவாக்குவதற்கு அடித்தளமிடட்டது.
இதுவொருபுறமிருக்கையில், கடந்த 35வருடங்களாக இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகியே வந்திருக்கின்றது.
ஆனாலும், இந்தியா தற்போது வரையில் அந்த இந்திய இலங்கைஒப்பந்தத்தினை முழமையாக நடைமுறைப்படுத்துமாறு வார்த்தைகளால் மட்டுமே வலியுறுத்தி வருகின்றது.இறுதியாக இலங்கை பொருளாதார நெருக்கடிகளில் மூழ்கி இருந்தபோது கூட நன்கு பில்லியன் டொலர்களை கடனாக வழங்கியது.
அதனைவிடவும் உடனடியான உதவிகளை வழங்கியது.சர்வதேச நாணய நிதியத்திற்கும் நேரடியாகச் சென்று இலங்கைக்கு நீடிக்கப்பட்ட கடன்வசதியைப்பெற்றுக்கொடுப்பதற்கான பிணையெடுப்பையும் செய்திருந்தது.அச்சமயத்தில், இந்தியா தன்னுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தினை முழுமையாக அமுலாக்குமாறு கிடுக்குப்பிடி பிடிப்பதற்கான அதியுச்சமான சதகமான நிலைமைகள் இருந்தன.
ஆனால், அவ்விதமான பிற்போக்குத் தனமான செயற்பாடுகள் எவற்றையும் இந்தியத் தரப்பு மேற்கொள்ளவில்லை. இலங்கை மீண்டெழுவதற்கு உதவியதோடு, நிரந்தரமான அமைதியான சூழல் ஏற்பட வேண்டுமென்றே இன்றளவிலும் கூறி வருகின்றது.உண்மையில், மாகாண சபை முறைகள் வெள்ளை யானையா இல்லையா என்பதற்கு அப்பால் அது தமிழர்களுக்கானது என்ற சிந்தனை தான் தென்னிலங்கைக்கு உள்ளது.
அதனால் தான் அதனை விமர்சனம் செய்வதோடு நின்றுவிடாது முழுமையாக அகற்றிவிடுவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.உண்மையில் மாகாண சபைகள் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டு 1988ஆம் ஆண்டிலிருந்து சொற்ப நாட்களே தமிழர்கள் இணைந்த வடக்கு கிழக்குமாகாண சபையின் பலனை அனுபவத்தார்கள்.
அதன்பின்னர் 2013இல் தான் வடக்கு மாகாண சபைக்கு தேர்தல் நடத்தப்பட்டது.ஆனால் அதற்கு இடைப்பட்ட ஏனைய காத்தில் தென்னிலங்கையில் ஆட்சியில் இருப்பவர்களின் கட்டுப்பாட்டிற்குள் தான் மாகாண சபைகள் இருந்தன.அதன்காரணமாக, தென்னிலங்கையில் எத்தனையோ தலைவர்கள் உருவாகியுள்ளார்கள்.
பொதுமக்கள் நன்மைகளை கண்டுள்ளார்கள். அவ்விதமான ஒரு முறைமையை நீக்குவதற்கு முனைவது எத்தனை அபத்தமானது.தற்போதுகூட மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்குரிய தடையை நீக்கும் பொருட்டு சுமந்திரன் தனிநபர் பிரேரணையொன்றை முன்வைத்துள்ளார்.
அது அரசியலமைப்பு முரனாணது இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் குறித்த பிரேரணையை நிறைவேற்றுவதன் மூலமாக மாகாணசபைகளுக்கான தேர்தலை உடனடியாகவே நடத்த முடியும். ஆகவே சந்தர்ப்பங்களும், சூழல்களும் சரியாக இருக்கின்ற நிலையில் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை உறுதிப்படுத்தி இலங்கை இந்திய சர்வதேச ஒப்பந்தத்தினை அமுலாக்குவது தான் இலங்கையின் அர்ப்பணிப்புள்ள செயற்பாடாக அமையும்.