மதுவில் சயனைட் கலக்கப்படுவதன் மர்மம் குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் மதுபானசாலையொன்றில் விற்பனைசெய்யப்பட்ட மதுவில் ‘சயனைட்‘ கலக்கப்பட்டிருந்த சம்பவம் தஞ்சாவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
குறித்த மதுபானசாலையில் விற்பனை செய்யப்பட்ட மதுவைப் பருகிய இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டபோது அவர்களது உடலில் சயனைட் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அதேபோன்று ஒரு சம்பவம் மயிலாடு துறையிலும் பதிவாகியுள்ளது.
இது குறித்து அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ’ மயிலாடுதுறையைச் சேர்ந்த பழனி குருநாதன், மற்றும் அவரது நண்பர் பூராசாமி மது அருந்திய நிலையில் உயிரிழந்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர்கள் பருகிய மதுவில் சயனைட் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிகழ்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அவர்கள் அருந்திய மதுவில் சயனைட் கலந்தது எப்படி? ஒருவேளை அவர்களே கலந்ததாக வைத்துக் கொண்டால், சயனைட் அவ்வளவு எளிதாக சந்தையில் கிடைக்கிறதா? கொடிய நஞ்சான சயனைட் விரும்பியவர்கள், விரும்பிய நேரத்தில் கிடைப்பதை அரசு அனுமதிக்கிறதா? இல்லையெனில் மதுபான சாலையில் விற்கப்பட்ட மதுவிலேயே நஞ்சு கலந்திருந்ததா? என்ற ஐயம் எழுகிறது.
அதைப் போக்க வேண்டியது அரசின் கடமை. தமிழ்நாட்டில் மது அருந்தி மக்கள் உயிரிழப்பது தொடர்வதும், மதுவில் சயனைடு கலந்திருந்தது தான் காரணம் என்று கூறி விட்டு அரசு கடந்து செல்வதும் கவலை அளிக்கிறது.
இது தொடர்பான மக்களின் ஐயங்களைப் போக்க உயர்நிலை விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.