டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 35 சிறுவர்கள் தற்போது கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் ஜி. விஜேசூரிய, நாடளாவிய ரீதியில் தற்போது வேகமாக டெங்கு நோய் பரவி வரும் நிலையில், கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைiயில் மட்டும் சுமார் 35 நோயாளிகள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவித்தார்.
ஒவ்வொரு முறையும் 3-4 நோயாளிகள் உள்நோயாளிகளாக வைத்தியசாலைக்கு வருகின்றனர் என்றும் நாளொன்றுக்கு சுமார் 7 பேர் ஹீமோபிலியா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மழையுடனான வானிலை காரணமாக சுற்றுச்சூழலையும், வீட்டையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், இதனை சரியாகக் கட்டுப்படுத்தாவிட்டால் வரலாற்றில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவான ஆண்டாக இந்த வருடம் மாறும் அபாயம் உள்ளதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அண்மைக்கால வரலாற்றில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் 2017ஆம் ஆண்டு பதிவாகியுள்ளனர் என்றும் 2017 ஆம் ஆண்டில் மட்டும் நாட்டில் 186,101 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, அந்த வருடத்தில் 440 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ள தொற்றுநோயியல் திணைக்களம், இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் மட்டும் 43 ஆயிரத்து 346 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.