அவுஸ்திரேலிய நாடாளுமன்றம் அருகே ரஷ்யா தனது புதிய தூதரகக் கட்டிடத்தை அமைக்க முடிவுசெய்திருந்த நிலையில் அவுஸ்திரேலிய அரசு அதற்கு தடை விதித்துள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி , உக்ரேன் மீது ரஷ்யா கடந்த ஒரு வருடகாலமாகத் தாக்குதல் நடத்தி வருகின்றது. இதன்காரணமாக அமெரிக்கா,பிரித்தானியா, பிரான்ஸ் , அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டு பதில் தாக்குதல் நடத்துவதற்கு உக்ரேனுக்கு பல உதவிகளைச் செய்து வருகின்றன.
இதன் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவானது மோசமடைந்துள்ளது.
இதனிடையே அவுஸ்திரேலிய நாடாளுமன்றம் அருகே ரஷ்யா தனது புதிய தூதரகத்தை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில் உளவு பார்க்கும் அபாயத்தைக் காரணம் காட்டி, அவுஸ்திரேலியா தனது நாடாளுமன்றத்திற்கு அருகில் ரஷ்ய தூதரகம் கட்டுவதற்கு தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கருத்துத் தெரிவிக்கையில் ” நாடாளுமன்றத்திற்கு மிக அருகில் ரஷ்யான தனது புதிய தூதரகத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. எனவே பாதுகாப்புக் கருதி நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அருகே ரஷ்யா புதிய தூதரகத்தை கட்டுவதை தடுக்கும் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தூதரகம் கட்டுவதற்கான நிலம் ஒதுக்கீடு தொடர்பான ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்க்கட்சிகள் மற்றும் பிற எம்.பி.க்களுக்கு இச்சட்டம் குறித்து நேற்று இரவு விளக்கமளிக்கப்பட்டது. இன்று பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் மூலம் சட்டத்தை நிறைவேற்ற ஒப்புக்கொண்டன.
இந்த முடிவு அவுஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்பு நலன்களுக்காக எடுக்கப்பட்டதாகும். இதற்கு ஒத்துழைத்த அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.