அதிகாரிகள் மக்களின் நலன்கள் சார்ந்த சமூகச் சிந்தனையோடு செயற்பட வேண்டும் என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.
ஊர்காவற்றுறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்கள் தொடர்பாக இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்ற சந்தர்ப்பங்களிலும் அவற்றுக்கான பயனாளர்களை தெரிவு செய்கின்ற போதும், எமது மக்களின் நலன்கள் சார்ந்த சமூகச் சிந்தனையோடு அதிகாரிகள் செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஊர்காவற்றுறை பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளப்படுத்தி, விரிவாக ஆராய்ந்து தீர்வுகாணும் நோக்கில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் போக்குவரத்து, விவசாயம், கால்நடை, குடிநீர் விநியோகம், கடற்றொழில் உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்டன.
மேலும், வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற காரைநகர் – ஊர்காவற்றுறை இடையிலான கடல் பாதை பழுதடைந்து இருப்பதனால், அதனை திருத்தி சேவையில் ஈடுபடுத்தும் வரையில், தனியார் படகுகளை வாடகைக்கு அமர்த்தி பொது மக்களுக்கான போக்குவரத்து சேவையை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தி இருந்தார்.
இதேபோன்று, தீவகங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டணங்களை மீளாய்வு செய்தல், குடிநீர் விநியோகத்தினை உறுதிப்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்களும் குறித்த கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.