நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிமிக்க பொருளாதாரச் சூழ்நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில நாட்களில் 75- 80 மில்லியன் டொலர் அளவிலான தொகை, கச்சா எண்ணெய் கொள்வனவிற்காக மத்திய வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.
இதனால் டொலரின் பெறுமதி சற்று அதிகரித்த நிலைமை காணப்பட்டது. டொலர் ஊடாக வர்த்தகம் செய்பவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் டொலரை கொள்வனவு செய்த காரணத்தினாலும்தான் டொலரின் பெறுமதி அதிகரித்தது.
ஆனால், நேற்று முதல் மீண்டும் டொலரின் விலை குறைய ஆரம்பித்துள்ளது. இது சாதாரண நிகழ்வாகும்.
எனவே நிலவும் பொருளாதார சூழ்நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தற்போதைக்கு அனுமதி வழங்க முடியாது.
ரூபாவின் மீள் பெறுமதி வீழ்ச்சியானது தேவை மற்றும் விநியோகத்தினால் ஏற்படுகின்ற ஒரு சாதாரண நிலைமை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.