ஐ.நா.மனித உரிமை பேரவையின் 53வது அமர்வு நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மூல அறிக்கை எதிர்வரும் புதன்கிழமை சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூலை 14 வரை இந்த அமர்வு இடம்பெறவுள்ள இந்த கூட்டத்தொடரில் எதிர்வரும் புதன்கிழமை, இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை விடயங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை அமையவுள்ளது.
மேலும் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் ஊழல், மோசடி என்பன மனித உரிமை விடயங்களில் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் குறித்த தினம் இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு மனித உரிமைகள் ஆணையாளர் வாய்மூலமாக அறிவிக்கவுள்ளார்.
கடந்த ஆண்டு செப்டெம்பரில் இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது, மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்சிலெட், இலங்கையில் மனித உரிமைகள் நிலவரம் குறித்து கடும் கரிசனையை வெளியிட்டு அறிவிக்கை ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அத்தோடு 51/1 தீர்மானமும் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.