மேற்காசிய நாடான லெபனானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவிவருகின்றது.
குறிப்பாக கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து லெபனான் அரசு கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருகின்றது. இதனை கட்டுக்குள் கொண்டுவர அந்நாட்டு அரசாங்கமும், மத்திய வங்கியும் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
இதனால் பொதுமக்களின் வங்கி சேமிப்புகளை எடுக்க முடியாத சூழல் அங்கு நிலவுகின்றது. இந்நிலையில் வங்கிகளின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் பாரிய போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன்போது ”பலரின் வாழ்வாதார சேமிப்புகள் அழிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டும் போராட்டக்காரர்கள், தங்கள் பணத்தை திரும்ப கேட்டும், இந்த நெருக்கடிக்கு மத்திய வங்கி ஆளுநர் ரியாத் சலாமே உட்பட ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள் அனைவரும் பொறுப்பெற்க வேண்டும் ”என வலியுறுத்தியும் வருகின்றனர்.
இந்நிலையில் அங்குள்ள வங்கிக் கட்டிடங்கள் பலவற்றையும் போராட்டக்காரர்கள் சூறையாடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.