அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு ஒருபோதும் ஆதரவளிக்க முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், சர்வதேசத்தை சமாளிக்கும் நோக்கிலேயே அரசாங்கம் இதனைக் கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்தை கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறான சட்டமூலங்களை கொண்டுவருவது சிறந்தது என்றாலும், அரசாங்கம் ஊழலை மறைக்கும் நோக்கில் இதனைக் கொண்டுவருகிறதா எனும் சந்தேகமும் எழுகிறது.
ஏனெனில், இந்த சட்டமூலத்தில் மக்கள் போராட்டங்களின்போது வலியுறுத்திய எந்தவொரு விடயமும் உள்ளடக்கப்படவில்லை.
நாட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்கள் வெளிநாடுகளில் காணப்படுமாக இருந்தால், அவற்றை நாட்டுக்கு மீள கொண்டுவர வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியிருந்தார்கள்.
அப்படியான செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன்பாக நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்கள்.
ஆனால், இவ்வாறான எந்தவொரு சரத்துக்களும் இந்தச் சட்டமூலத்தில் இல்லை. மக்களின் ஆணைக்கு புறம்பாக அரசாங்கம் ஏன் இதனை செய்ய வேண்டும்.
இவ்வாறான சட்டமூலத்திற்கு நாம் ஒருபோதும் ஆதரவளிக்க முடியாது. சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒரு பெயரளவிலேயே இந்த ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டுவர முயற்சிக்கிறது.
ஒரு தரப்பை பாதுகாக்கவே அரசாங்கம் முற்பட்டுக் கொண்டிருக்கிறது. மாறாக, நாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களை மீள பெற்றுக் கொள்ள வேண்டும் என்றோ குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்றோ அரசாங்கத்திற்கு அக்கரையில்லை.
இப்படியான முழுமைப்பெறாத ஒரு சட்டமூலத்திற்கு நாம் எதிர்க்கட்சியாக ஒருபோதும் ஆதரவளிக்க முடியாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.