போட் சிட்டி அபிவிருத்தித் திட்டத்தை இடை நடுவில் நிறுத்தி, ராஜபக்ஷவினரே கொள்ளையடித்ததாக சிலர் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாதென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “போட் சிட்டி அபிவிருத்தித் திட்டத்தை இடை நடுவில் நிறுத்தி, ராஜபக்ஷவினர் கொள்ளையடித்ததாகக் கூறினார்கள்.
அதுதொடர்பாக தேடிப்பார்த்த பின்னர், ராஜபக்ஷக்கள் கொள்ளையடிக்கவில்லை என்று கூறி, மீண்டும் போர் சிட்டி திட்டத்தை ஆரம்பித்தார்கள்.
இன்று ராஜபக்ஷக்களால் செய்யப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களினால் நாட்டுக்கு நஷ்டம் என்று கூறுகிறார்கள்.
உண்மை தான். விமானங்கள் வந்திறங்கும் விமான நிலையத்தை, நெற் களஞ்சிய சாலையாக மாற்றினால் நஷ்டம் ஏற்படத்தானே செய்யும்?
இதுதான் எமது நாட்டின் அரசியல் கலாசாரம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.