53வது ஐநா மனிதஉரிமைகள் கூட்டத்தொடர் கடந்த 19ஆம் திகதி தொடங்கியிருக்கிறது. இதில் இலங்கை தொடர்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய வாய்மூல அறிக்கை வாசிக்கப்பட்டுள்ளது.அதில் பொறுப்புக் கூறல் தொடர்பாக அழுத்தமான கருத்துக்கள் உண்டு. பொறுப்பு கூறல் எனப்படுவது இறந்த காலத்திற்கு பொறுப்பு கூறுவது. இறந்த காலத்தில் நடந்த குற்றச்செயல்களுக்கு பொறுப்பு கூறுவது. அக்குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியையும் நிவாரணத்தையும் வழங்குவது. அவ்வாறு நீதியை நிலை நாட்டுவதன்மூலம் சமாதானத்தை,நல்லிணக்கத்தை ஸ்தாபிப்பது. இதை ஐநாவின் வார்த்தைகளில் சொன்னால் நிலைமாறு கால நீதியை ஸ்தாபிப்பது.
ஐநாவின் முப்பதின் கீழ் ஒன்று தீர்மானம் 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது.அது பொறுப்பு கூறலுக்கானது. தீர்மானத்தின் பிரகாரம் அப்போது இருந்த ரணில்-மைத்திரி அரசாங்கம் பொறுப்புக்கூறலுக்கான கட்டமைப்பு மாற்றங்களை செய்ய வேண்டும் என்று கேட்கப்பட்டது. ஆனால் பேராசிரியர் ஜெயதேவ உயாங்கொட கூறியதுபோல ரணில் அவ்வாறான கட்டமைப்புசார் மாற்றங்களைச் செய்யவில்லை.அவர் நிலைமாறு கால நீதிக்கு விசுவாசமாக இருக்கவில்லை. மைத்திரியும் இருக்கவில்லை. ரணிலுக்கும் மைத்திரிக்கும் இடையிலான முரண்பாடுகளின் விளைவாக 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மைத்திரி நிலைமாறுகால நீதியைக் காட்டிக் கொடுத்தார். இலங்கைத் தீவில் நிலைமாறு கால நீதியின் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரி தான் பெற்றெடுத்த குழந்தையை அனாதையாக்கினார்.
இலங்கைத் தீவை பொறுத்தவரையிலும் நிலைமாறுகால நீதிக்கான செய்முறைகள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தின.மஹிந்தவின் பின்னணியில் மைத்திரி 2018 ஆம் ஆண்டு ஏற்படுத்திய யாப்புக் குழப்பம் என்பது ஒரு விதத்தில் நிலைமாறுகால நீதியை விசுவாசமாக முன்னெடுக்க தவறியதன் விளைவுதான்.அதனால் ராஜபக்சக்கள் மைத்திரியை ஒரு கருவியாக பயன்படுத்தி ஒரு யாப்புச் சதியைச் செய்ய முயற்சித்தார்கள். ஆனாலும் தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகள் இணைந்து ராஜபக்சகளின் அந்த முயற்சியை தோற்கடித்தார்கள். ரணிலைப் பாதுகாத்தார்கள். அங்கே தான் ராஜபக்சக்கள் ஒரு முக்கியமான முடிவை எடுத்தார்கள்.கொழும்பை யார் ஆள்வது என்பதனை தமிழர்களும் முஸ்லிம்களும் தீர்மானிக்காதபடி தனிச் சிங்கள மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கேட்டு பெற்று அடுத்த முறை ஆட்சிக்கு வருவது என்று அவர்கள் முடிவு எடுத்தார்கள்.ஈஸ்டர் குண்டு வெடிப்பு அவ்வாறு மூன்றில் இரண்டு தனிச் சிங்களப் பெரும்பான்மை பெறுவதற்கு வேண்டிய அடித்தளத்தை மேலும் பலப்படுத்தியது.முடிவில் கோத்தாய ராஜபக்ஷ மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வந்தார். அது கணக்குப்படி முழுமையான தனிச் சிங்களப் பெரும்பான்மை அல்ல. அதில் 4 லட்சத்துக்கும் குறையாத தமிழ் முஸ்லிம் வாக்குகள் உண்டு.எனினும் ராஜபக்சக்கள் அதனை தனிச் சிங்களபௌத்த வாக்குகளாக வர்ணித்தார்கள்.ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு வெற்றி பெற்ற அந்த அரசாங்கத்தை சிங்கள மக்களே பின்னர் துரத்தியடித்தார்கள்.
அதன் விளைவாக மீண்டும் ரணிலுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் 2015 இல் தொடங்கிய கதையை மீண்டும் தொடர எத்தனிக்கின்றார்.நிலைமாறு கால நீதிக்குரிய கட்டமைப்புகளில் ஒன்று ஆகிய உண்மை மற்றும் நீதிக்கான ஆணை குழுவை உருவாக்கப் போவதாக அவர் கூறி வருகிறார்.ஏற்கனவே நிலைமாறு கால நீதிச் செய்முறைகளின் கீழ் உருவாக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம்,இழப்பீட்டு நிதிக்கான அலுவலகம் போன்றவற்றையும் ஒரு பெரிய அடைவாக அவர் காட்டப்பார்க்கின்றார்.
இலங்கைத் தீவைப் பொறுத்தவரையிலும் நிலைமாறுகால நீதி என்பது ஓர் அழகிய பொய்யாகி விட்டது. 2015 இல் இருந்து 2018 வரையிலும் நிலை மாறுகால நீதியின் பங்காளியாகச் செயற்பட்ட கூட்டமைப்பு அதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டது. 2021 ஆம் ஆண்டு வவுனியாவில் நடந்த ஒரு கூட்டத்தில் சுமந்திரன் அதை வெளிப்படையாகச் சொன்னார். அது மூன்று கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஐநாவுக்கு ஒரு கடிதத்தை எழுதும் நோக்கத்தோடு ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம்.அக்கூட்டத்தில் சுமந்திரன் சொன்னார் “6 ஆண்டுகளாக ஒரு பரிசோதனையை செய்தோம் அதில் தோற்றுப் போய்விட்டோம்” என்ற தொனிப்பட.
இதுதான் இலங்கைத் தீவில் நிலைமாறு கால நீதியின் அதாவது பொறுப்புக் கூறலின் நிலை.இந்நிலையில் இப்பொழுது மறுபடியும் நிலைமாறுகால நீதியின் பிரதான தூண்களில் ஒன்று ஆகிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவைக்குறித்து அரசாங்கம் பேசத் தொடங்கியிருக்கிறது.அதற்குரிய சட்ட ஏற்பாடுகளையும் செய்து வருகின்றது.
இப்படிப்பட்டதோர் பின்னணிக்குள்தான்,கடந்த 19ஆம் தேதி தொடங்கிய மனித உரிமைகள் கூட்டத்தொடரில், ஐநா மனித உரிமைகள் ஆணையருடைய வாய் மூல அறிக்கையில் பொறுப்புக்கூறல் தொடர்பாக மீண்டும் கூறப்பட்டுள்ளது. அதாவது நிலைமாறுகால நீதி தொடர்பாக அழுத்தமாகக் கூறப்படுகிறது. ஆனால் இங்கே கேள்வி என்னவென்றால் கடந்த எட்டு ஆண்டுகால பொறுப்பு கூறாமைக்கு யார் யார் பொறுப்பு ?என்பதாகும்.
முதலாவதாக இலங்கை அரசாங்கங்கள் பொறுப்பு. அதைத்தான் ஐநாவும் திரும்பத் திரும்ப கூறுகிறது.ஆனால் இந்த விடயத்தில் ஐநாவுக்கும் ஒரு பொறுப்பு உண்டு. மேற்கு நாடுகளுக்கு அதைவிடக்கூடப் பொறுப்பு உண்டு.
முதலாவதாக ஐநா கடந்த எட்டு ஆண்டுகளாக அதன் பொறுப்பைச் செவ்வனே நிறைவேற்றியுள்ளதா? கடந்த எட்டு ஆண்டுகளாக என்பதை விடவும் கடந்த 14 ஆண்டுகளாக என்று கேட்பது பொருத்தமாக இருக்கும். 2009க்குப் பின்னிருந்து ஐநா நிலைமாறுகால நீதியை ஸ்தாபிக்குமாறு இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சி செய்த அரசாங்கங்களிடம் கேட்டு வருகின்றது.ஆனால் அதை கட்டமைப்புசார் மாற்றங்களின் ஊடாகச் செய்ய முடியவில்லை.ஏனெனில் இலங்கையில் நிலை மாற்றம் ஏற்படவில்லை. நிலை மாற்றம் ஏற்படாத ஒரு நாட்டில் நிலைமாறுகால நீதியை உபதேசிப்பது என்பதே ஓர் அடிப்படைத் தவறு.
இந்நிலையில்,கடந்த 14 ஆண்டுகளாக இலங்கை அரசாங்கங்களை பொறுப்பு கூறுமாறு நிர்ப்பந்திப்பதற்கு ஐநாவால் முடியவில்லை. ஏனென்றால் ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு வரையறுக்கப்பட்ட மக்கள் ஆணைதான் உண்டு. அது ஒரு நாட்டின் மீது அழுத்தத்தை பிரயோகிக்கவோ அல்லது தடைகளை விதிக்கவோ முடியாது.ஐநாவின் ஏனைய உறுப்புகளான பொதுச் சபை பாதுகாப்புச் சபை போன்றவற்றுக்குள்ள அதிகாரம் மனித உரிமைகள் பேரவைக்கு கிடையாது. மனித உரிமைகள் பேரவையால் என்ன செய்ய முடியும் என்றால், ஒரு நாட்டின் அரசாங்கம் ஒத்துழைத்தால் மட்டும் அந்த நாட்டில் இறங்கி வேலை செய்யமுடியும்.அந்த நாட்டின் அரசாங்கம் ஒத்துழைக்கவில்லை என்றால் ஒன்றும் செய்யமுடியாது.தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டு பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
இலங்கைத் தீவிலும் அதுதான் நடக்கின்றது. 2015ல் ரணில் ஆட்சிக்கு வரும் வரையிலும் ஐநா தீர்மானங்கள் நிறைவேற்றிவிட்டு பார்த்துக் கொண்டிருந்தது. 2015 இல் நிலைமாறுகால நீதிக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின் ஐநா ரணில்-மைத்திரி அரசாங்கத்தின் கண்துடைப்பான நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருந்தது. 2018க்குப்பின் நிலைமாறுகால நீதி குப்பைத் தொட்டிக்குள் எறியப்பட்டு விட்டது.இப்பொழுது மறுபடியும் ரணில் அதற்கு உயிர் கொடுக்க முயற்சிக்கின்றார்.
இலங்கைத் தீவைப் பொறுத்தவரையிலும் தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் மீது நிர்ப்பந்தங்களை பிரயோகிப்பதற்கு ஐநாவால் முடியவில்லை. அல்லது ஐநா விரும்பவில்லை. அதிகாரம் குறைந்த மனித உரிமைகள் பேரவைக்குள் இலங்கை விவகாரத்தை பெட்டிகட்டியது என்பதே ஓர் அரசியல் தீர்மானம் தான்.கேந்திர முக்கியத்துவம் மிக்க ஒரு புவிசார் அமைவிடத்தில் அமைந்திருக்கும் இலங்கைத் தீவை இறுக்கிப்பிடித்தால் அது சீனாவை நோக்கி போய்விடும் என்ற அச்சம் ஐநாவுக்கு உண்டு;அமெரிக்காவுக்கு உண்டு; இந்தியாவுக்கும் உண்டு.எனவே இலங்கைத் தீவில் ஐநாவின் செயற்பாடுகள் எனப்படுகின்றவை புவிசார் மற்றும் பூகோள அரசியல் நலன்களின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகின்றன.எனவே இலங்கைத்தீவில் பொறுப்புக் கூறாமைக்கு ஐநாவும் ஒரு காரணம்.
இரண்டாவது காரணம்,மேற்கு நாடுகள்.மேற்கு நாடுகள் இலங்கை விவகாரத்தை பாதுகாப்புச் சபைகோ அல்லது பொதுச்சபைக்கோ கொண்டு போகத் தயாரில்லை.ஏன் அதிகம் போவான்?கடந்த ஆண்டிலிருந்து செயற்பட்டு வருகின்ற சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகம்கூட மனிதஉரிமைகள் பேரவைக்குள்தான் அடங்கும்.அதாவது ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே இலங்கை விவகாரத்தை கொண்டு போக மேற்குலகம் தயாராக இல்லை; இந்தியாவும் தயாராக இல்லை.
அதுமட்டுமல்ல,பொருளாதார நெருக்கடிக்கு பின்னரும் அவ்வாறு இலங்கை அரசாங்கத்தின் மீது நிர்ப்பந்தங்களை அழுத்தங்களைப் பிரயோகிக்க மேற்கு நாடுகள்,இந்தியா,ஐநா போன்றன தயாராக இல்லை.இலங்கைத் தீவை பொருளாதார நெருக்கடியில் இருந்து பிணையெடுக்க முற்படும் இந்தியாவோ அல்லது மேற்கு நாடுகளோ இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு தயாராக இல்லை.குறிப்பாக பன்னாட்டு நாணய நிதியத்தின் உதவிகள் நிபந்தனைகள் இன்றி வழங்கப்பட்டனவா என்று கேட்கும் அளவுக்கு நாட்டில் நிலைமை உள்ளது. ஒருபுறம் நாணய நிதியத்தின் உதவிகள் கிடைக்கின்றன.இன்னொருபுறம் சிங்களபௌத்த மயமாக்கல் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றது.
அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொறுப்பு கூறவில்லை.அரசியல் கைதிகள் ஓரளவுக்கு விடுவிக்கப்படுகின்றார்கள்.காணிகள் சிறிய அளவிற்கு விடுவிக்கப்படுகின்றன.இதைத்தவிர பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை. மாறாக,சிங்களபௌத்த மயமாக்கல் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த விடயத்தில் உதவி வழங்கிய நாடுகளும் பன்னாட்டு நாணய நிதியமும் அரசாங்கத்தின்மீது எந்த விதமான அழுத்தங்களையும் பிரயோகித்திருக்கவில்லையா என்ற கேள்வி எழுகிறது.இலங்கை அரசுக்கட்டமைப்பு நொந்து போயிருக்கும் ஒரு காலகட்டத்தில்,அதன் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து இனப்பிரச்சினக்கான தீர்வு தொடர்பில் தீர்க்கமான முடிவுகளை எடுக்குமாறு நிர்ப்பந்திப்பதற்கு ஏன் மேற்கு நாடுகளோ இந்தியா முயற்சிக்கவில்லை? எனவே கூட்டிக் கழித்துப் பார்த்தால் இலங்கை அரசாங்கங்கள் பொறுப்பு கூறாமைக்கு ஐநாவும் பொறுப்பு.மேற்கு நாடுகளும் இந்தியாவும் பொறுப்பு.தமிழ் அரசியல்வாதிகளும் பொறுப்பு.